எதிர்காலத்தில் சகல தேர்தல்களும் தொகுதிவாரி தேர்தல் முறையில்.ஜனாதிபதி!

600

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை விருப்புவாக்கு முறைக்கு பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையில் நடத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் வட மத்திய மாகாண சபையின் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் விருப்பு வாக்கு தேர்தல் முறையினால் அரசியல்வாதிகள் நாட்டைப் பற்றி சிந்திப்பதற்கு முன்னர் தமது தனிப்பட்ட அரசியல் வெற்றிக்காகவே செயற்படுகின்றனர் என்றும் அதனால் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் வெற்றிகளை அவர்களுக்காக பெற்றுக்கொடுக்க முடியாது போயுள்ளது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தில் காணப்படும், அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் சில தரப்பினர் எதிர்ப்பினை முன்வைத்தபோதிலும் தனது தலைமையின் கீழ் விருப்புவாக்கு தேர்தல் முறைக்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையின் கீழ் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை கட்சி பேதமின்றி சகல மக்களும் பெற்றுக்கொண்ட வெற்றியாகவே தான் கருதுவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நாட்டில் சகல தேர்தல்களும் ஒரே முறையில் நடைபெற வேண்டும் என்பதுடன், அதற்கேற்றவாறு அண்மையில் நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலை தொகுதிவாரி அடிப்படையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலையும் விருப்புவாக்கு முறைக்கு பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையில் நடத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது தன்னால் மக்களுக்கு வழங்கப்பட்ட பிரதான வாக்குறுதிகளுள் ஒன்றான இந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையை மாற்றியமைத்து அதற்குப் பதிலாக தொகுதிவாரி தேர்தல் முறையை இலங்கை அரசியலில் ஏற்படுத்துவதன் ஊடாக ஒட்டுமொத்த மக்களுக்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்கான சகல நடவடிக்கைகளையும் தான் மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்தார்.