
தனியார் பஸ் கட்டணம் 07 சதவீதத்தால் அதிகரிக்கின்ற போதிலும் ஆகக் குறைந்த கட்டணமான 9 ரூபாவில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் தெரிவித்தார்.
அதிகரிக்கப்பட்ட பஸ் கட்டணங்களுக்கான பட்டியல் அதிகாரிகளால் இன்று தயாரிக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதேவேளை 200 கிலோ மீற்றரிலும் கூடுதலான தூரங்களுக்கான ரயில் கட்டணத்தினை 80 ரூபாவால் அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று நடத்தப்படவிருப்பதாக ரயில்வே திணைக்களத்தின் வர்த்தகப் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி சிசிரகுமார நேற்றுத் தெரிவித்தார்.
தனியார் பஸ் கட்டணங்களை நவம்பர் முதலாம் திகதி முதல் 07 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்நிலையில் புதிய பஸ் கட்டணங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்கழுவின் பட்டியல் அடிப்படையில் இன்று திங்கட்கிழமை தயாரிக்கப்பட்டும். இருப்பினும் ஆகக் குறைந்த பஸ் கட்டணமான 9 ரூபாவில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படப் போவதில்லை.
பஸ் கட்டணம் 10 சதவீதத்தால் அதிகரிக்கும் பட்சத்திலேயே ஆகக் குறைந்த பஸ் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுமெனவும் அவ்வதிகாரி கூறினார். ரயில்வே கட்டணங்கள் கடந்த 08 வருடங்களாக அதிகரிக்கப்படாத நிலையில் எதிர்வரும் மாதம் முதல் 200 கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரமுடைய இடங்களுக்கான கட்டணத்தை 80ரூபாவால் மறுசீரமைக்க தீர்மானித்திருப்பதாக வர்த்தக அதிகாரி சிசிர குமார தெரிவித்தார்.
ரயில்வே கட்டணங்களில் நிலவும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முகமாகவே இந்த அதிகரிப்பு முன்னெடுக்கப் படவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.




