வவுனியா வெளிக்கள உத்தியோகத்தர் மோசடியில் ஈடுபட்டால் தெரிவியுங்கள் : பிரதேச செயலாளர்!!

349

வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட திணைக்களங்களில் பணியாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை வவுனியா பிரதேச செயலகத்திலோ அல்லது தொலைபேசியூடாகவோ தெரிவிக்க முடியுமேன வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், வவுனியாவில் வெளிக்கள உத்தியோகத்தர்களாக பணியாற்றும் அரச ஊழியர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை மேற்கொள்ளாது வெளிக்களப்பணிகள் என அதிகாரிகளிடம் தெரிவித்து வேறு தொழில்கள் புரிந்து வருவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே பொதுமக்களுக்கு சேவைபுரிவதற்கே வெளிக்களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இனிவரும் காலங்களில் வெளிக்களப்பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் கிராமங்களில் தமது பணிகளை சிறப்பாக மேற்கொள்ளவில்லை என எமக்கு பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கும் பட்சத்தில் குறித்த வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்கு தயார்.

முறைப்பாடுகள் தொடர்பாக எனது அலுவலக தொலைபேசி இலக்கமான 024 2222202 அல்லது மேலதிக பிரதேச செயலாளர் இலக்கமான 024 2222236 தயக்கமின்றி முறைப்பாடு மேற்கொள்வதுடன் பிரதேச செயலகத்தில் வைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பெட்டியில் தங்களது முறைப்பாடுகளை எழுத்து மூலமாக எழுதி போட முடியுமென பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.