யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களுக்குமான தீர்ப்பு சில மணி நேரங்களில் வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் யாழ். மேல் நீதிமன்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் நீதிமன்ற வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், துப்பாக்கி ஏந்திய விசேட அதிரடிப்படையினரும் நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற வளாகத்துக்குள் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும, நீதிமன்றுக்கு செல்வதற்கான இரு பக்க வழிகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை புங்குடுதீவு மாணவி வித்தியா கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது குறித்த வழக்கு விசாரணைகள் யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், அண்மையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் அடங்கிய குழு முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டது.
இதன் போது ஏழு சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், முதலாம் மற்றும் ஏழாவது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையிலேயே இன்றைய தினம் வித்தியா படுகாலை வழக்கின் தீர்ப்பு நாளாக திகதியிடப்பட்ட நிலையில், இன்றும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.