கின்னஸ் சாதனை நிகழ்வை முறையாக ஒழுங்கு செய்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருக்காது!!

503

 
கண்டியில் இடம்பெற்ற கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு ஒன்றில் மாகாண முதலமைச்சர் தலைமை தாங்கியது தொடர்பில், கடந்த ஒரு வார காலமாக ஊடகங்கள் மற்றும் ஏனையோரால் விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றது.

இது தனிப்பட்ட ஒரு நிகழ்வு. அந்த நிகழ்வில் மணமகள் அணிந்திருந்த 3.8 கிலோ மீற்றரான சேலையின் முந்தாணையை, சீருடை அணிந்த பாடசாலை மாணவர்கள் காலை முதல் மதியம் வரை தாங்கி நின்றமையே விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தநிலையில், தனிப்பட்ட ஒருவரின் நிகழ்ச்சி அல்லாமல் இந் நிகழ்ச்சியை நிறுவியிருந்தால், இந்த பிரச்சினை வந்திருக்காது என, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரன் தெரிவித்தார்.

ஹட்டன் – லெதண்டி – கலனிவத்தை தோட்டத்தில் நேற்று (26) ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு நவக்கிரக சிலை வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ரமேஷ்வரன், மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பாடசாலைகளில் கலை கலாச்சார நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற வேண்டும். ஆனால் தனிப்பட்ட ஒருவரின் நிகழ்ச்சி நிரலாக இது அமைந்து விடக்கூடாது.

நான் அமைச்சராக பொறுப்பேற்ற போது, தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு யாரும் செல்ல கூடாது என்று அதிகாரிகளுக்கு கூறியிருந்தேன்.

தேசிய நிகழ்ச்சிகள் காலத்திற்கு ஏற்ப பாடசாலைகளுக்கு ஒழுங்கு செய்து கொடுக்கப்படும். இதேபோன்று எதிர்வரும் 7ம், 8ம் திகதிகளில் தமிழ் சாகித்திய விழா இடம்பெற உள்ளது.
இதில் 2500 பாடசாலை மாணவர்கள் பங்குகொண்டு கலை, கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

அந்த வேளையில் தோட்ட பகுதி கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது. இதுவும் கூட சில நேரங்களில் விமர்சனத்திற்குள்ளாக்கப்படலாம். முறையாக நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்து நடத்தும் பொழுது ஏற்படக் கூடிய பிரச்சினைகளை இல்லாதொழிக்கலாம் என்றார்.