நீதிமன்றத்தை ஏமாற்றிய பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு சிறை!!

350

நீதிமன்றுக்கு அபராதமாகவும், பிணைத் தொகையாகவும் கிடைத்த பணத்தை மோசடி செய்த குற்றத்தின் பேரில், கொழும்பு மேல் நீதிமன்ற முன்னாள் தலைமைப் பதிவாளரான 79 வயதுப் பெண்ணுக்கு 22 மாத சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

1990ஆம் ஆண்டு முதல் சுமார் மூன்றரை வருட காலத்தினுள், குறித்த பதிவாளரும் மேலும் ஐந்து பேரும் நீதிமன்றில் செலுத்தப்பட்ட பிணைத் தொகைகள் மற்றும் அபராதத் தொகைகளை கணக்கில் காட்டாமல் மோசடி செய்து வந்துள்ளனர்.

இது குறித்த விசாரணையின்போது, குறித்த பெண் பதிவாளர் தாம் தவறிழைத்ததை ஒப்புக்கொண்டார். அத்துடன், அதிகாரிகள் சிலரின் அழுத்தத்தின் பேரிலேயே தாம் அவ்வாறு மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டார்.

அவர் இழைத்த குற்றத்திற்கு மற்றொரு தண்டனையாக அவருக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியமும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காரணிகளை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் கலுவாரச்சி, 22 மாத சிறைத் தண்டனையை அந்தப் பதிவாளர் பத்து வருடங்களுக்குள் அனுபவிக்க வேண்டும் என்றும் தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

சுமார் பத்தொன்பது மில்லியன் ரூபாவை மோசடி செய்த முன்னாள் தலைமைப் பதிவாளருக்கு, சிறைத் தண்டனையுடன் 13,500 ரூபாவை அபராதமாகவும் அரசுக்கு நட்ட ஈடாக ஒரு மில்லியன் ரூபாவைச் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.