இந்தியாவால் இனிமேல் சச்சினையோ, கவாஸ்கரையோ உருவாக்க முடியாது : அர்ஜுன ரணதுங்க!!

419

Arjuna-Ranatunga

முன்னைய காலம் போலல்லாது இப்போது இந்தியாவிடமிருந்து கிரிக்கெட் தொடர்பாகக் கற்றுக்கொள்வதற்கு எவையும் கிடையாது என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நியூ டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துத் தெரிவிக்கும் போதே அர்ஜுன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
தங்களுடைய காலத்தில் தாங்கள் கற்றுக்கொள்ளும்போது இந்தியாவைப் பார்த்து அதனிடமிருந்து கற்றுக்கொள்வது ஒரு பகுதியாகக் காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அர்ஜுன ரணதுங்க, ஆனால் இனிமேல் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள முடியுமென நினைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இளைய வீரர்கள் பலர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளை நிதி நலன்களுக்காக விளையாட விரும்புவது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட அர்ஜுன ரணதுங்க இந்தியாவால் இனிமேல் சச்சின் டென்டுல்கரையோ, சுனில் கவாஸ்கரையோ உருவாக்க முடியாது என்பது நிச்சயமானது எனக் குறிப்பிட்டார்.

சிரேஷ்ட வீரர்களான மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார ஓய்வுபெற்ற பின்னர் அதை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக இலங்கை அணி தயார் நிலையில் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் தற்போதைய பிரதம தேர்வாளரான சனத் ஜெயசூரிய நீண்ட கால நோக்கில் செயற்படுவதாகக் குறிப்பிட்டார்.

தங்களுடைய அணியின் வீரர்கள் வயதாகிக் கொண்டிருந்த போது சனத் ஜெயசூரியவை உப தலைவராக்கியதாகவும் மார்வன் அத்தப்பத்து, றசல் ஆர்னல்ட் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அர்ஜுன இங்கு குறிப்பிட்டார்.