சச்சினின் ஓய்வு தாமதம் : வினோத் காம்ளி!!

323

vinod-kambli

சச்சின் ஓய்வு லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஏமாற்றமானது எனினும் இம்முடிவு தாமதமானது என்றும் 2011 உலகக் கிண்ணத்தை வென்ற போதே ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று வினோத் காம்ளி தெரிவித்தார்.

இந்திய அணியின் சச்சின் டெண்டுல்கர் (40) சர்வதேச போட்டிகளில் சதத்தில் சதம் அடித்து சாதித்த இவரும் பள்ளித் தோழன் வினோத் காம்ளியும் (41) இணைந்து 1988ல் பாடசாலை அளவிலான கிரிக்கெட்டில், அதிக ஓட்டங்கள் (664) சேர்த்த ஜோடி என்ற பெருமை பெற்றனர்.

இதனிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான நவம்பர் 14-18 ல் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் முழுமையாக ஓய்வு பெறுகிறார்.

இது குறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில் தொடக்க காலத்தில் இருந்ததை போல தற்போது சச்சின் கிடையாது. கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டங்கள் சேர்க்கவில்லை. இது சோகமானது.

சச்சினின் குழந்தை பருவ கனவு உலகக் கிண்ணம் வெல்வது. இது 2011ல் நிறைவேறியவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும்.

சச்சினின் ஓய்வு முடிவு என்பது சரியானது தான். இவர் பங்கேற்கவுள்ள கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கும் என்றும் இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறேன் எனவும் கூறினார்.

இந்தியா வரவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில், இரண்டாவது டெஸ்ட் (நவம்பர் 14-18) போட்டியுடன் சச்சின் ஓய்வு பெறுகிறார். இது இவரது 200வது டெஸ்ட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து இன்று மும்பையில் நடக்க உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பி.சி.சி.ஐ.,) அட்டவணை ஒருங்கிணைப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடக்கலாம். சச்சின் கேட்டுக் கொண்டபடி அவரது 200வது டெஸ்ட் போட்டி சொந்த ஊரான மும்பையில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளது.

தவிர இப்போட்டியுடன் விடைபெற உள்ள இவருக்கு மும்பை கிரிக்கெட் சங்கம் , பி.சி.சி.ஐ., சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிகிறது.