பழங்கள் ஆரோக்கியத்திற்கு அவசியமான பல ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளதை அறிவீர்கள். பிரதானமாக விற்றமின் ‘சீ ’ உள்ளிட்ட பல விற்றமின்களையும், அன்ரிஒக்சிடன்ற்களையும், கனியங்களையும், நார்ப்பொருட்களையும் கொண்டுள்ள பழங்கள் மனிதரின் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை. இந்த வகையில் எமது நாட்டில் பயிரிடப்படுகின்ற அன்னாசிப் பழமும் முக்கியமான ஊட்டங்களையும் கொண்டுள்ளதுடன் பல நோய்களைத் தடுக்கின்றன.
அன்னாசிப் பழத்தை பழமாகவோ, பழச்சாறாகவோ, புருட் சலட் ஆகவோ சமைத்தோ உண்ண முடியும். மிகவும் சுவையான இந்தப் பழத்தை அனைவரும் விரும்பி உண்கின்றனர். அபூர்வமாக ஒரு சிலருக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவதுண்டு. இவ் ஒவ்வாமை காரணமாக இதழ், முரசு, நாக்கு என்பன தடிப்பதுடன் வெகு சிலரில் தேக அரிப்பு ஏற்படலாம். அன்னாசிப் பழத்தை அதிக நாட்கள் வைத்திருந்து உண்டால் ஊட்டங்கள் குறைவடையலாம். குளிர்சாதனப் பெட்டியில் 4 – 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.
அன்னாசிப் பழம் புற்று நோயைத் தடுக்கும்.
இன்று சவாலாக உள்ள நோய்களில் புற்று நோய் முக்கியமானது. அன்னாசிப் பழம் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதில் பங்காற்றுவதால் எமது நாளாந்த உணவில் அடிக்கடி இதைச் சேர்த்துக் கொள்ளலாம். அன்னாசிப்பழத்திலுள்ள விற்றமின் சீ, புறுமெலயின் (Brome lain) மற்றும் மங்கனீஸ் (Manganese) என்பன புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கும் வல்லமை கொண்டவை. குறிப்பாக குடும்ப பரம்பரை வரலாற்றில் புற்றுநோய் உள்ளவர்கள் அன்னாசிப்பழத்தை வாரம் இரண்டு மூன்று தடவையாவது உண்பது சிறந்த பலனைத் தரும்.
கல வளர்ச்சியிலும் தொழிற்பாட்டிலும் முக்கியமான கொலாஜெனை (Collagen) உருவாக்குவதில் விற்றமின் சீ, போலேற் என்பன தொழிற்படுகின்றன. இது கட்டுப்பாடற்ற கலப்பிரிகையை தடுத்து புற்றுநோயையும் தடுக்கின்றது. அன்னாசி மாத்திரமின்றி வேறு சில பழங்களும் இவ்வாறான அம்சங்களைக் கொண்டிருப்பதால் நாம் தினமும் பழவகைகளை தவறாமல் சாப்பிடுவதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதை ஓரளவு தவிர்க்க முடியும்.
நீரழிவு நோயாளர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாம்
பொதுவாக பழவகைகள் இனிப்பாக இருப்பதனால் நீரிழிவு நோயாளர்கள் பழங்களைச் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் நீரிழிவு நோயாளர்கள் மட்டான அளவில் பழங்களை கட்டாயமாகச் சாப்பிடுவதால் பல நன்மைகள் உள்ளன. குருதிக் குளுக்கோசின் அளவை பெரும்பாலான பழங்கள் சடுதியாக கூட்டுவதில்லை. பழங்களிலுள்ள அத்தியாவசியமான நுண் ஊட்டங்கள் நன்மை பயக்கும். குறிப்பாக அன்னாசியிலுள்ள விற்றமின் B6,B1,B5,போலேற், C என்பன நீரிழிவு நோயாளர்களுக்கு நன்மை பயக்கும். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துகள் நிறைய உள்ளதால் குருதி வெல்லத்தை அதிகரிக்கச் செய்வதில்லை. எனவே பயப்படாமல் நீரிழிவு நோயாளர்கள் அன்னாசிப் பழம் சாப்பிடலாம்.
அன்னாசிப் பழத்தின் பல்வேறு நன்மைகள்.
அன்னாசிப் பழம் உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதால் பல்வேறு நோய்களிலிருந்து காக்கின்றது. சக்தியை வழங்குவதால் உற்சாகத்தை அளிக்கின்றது. மூட்டுகளுக்கு பாதுகாப்பளிப்பதால் மூட்டுவாத நோயைத் தடுப்பதுடன் எலும்புகளுக்கு உறுதியை வழங்குகின்றது. பற்களுக்கும், முரசுக்கும் உறுதியை வழங்குவதன் மூலம் வாய்ச்சுகாதாரத்தை பேணுகின்றது. சளி, தடிமல், இருமல் முதலானவற்றை குறைக்கின்றது. அன்னாசிப்பழத்திலுள்ள நிறைந்த நார்ச்சத்து சமிபாட்டை இலகுபடுத்துவதுடன் மலச் சிக்கலையும் தடுக்கின்றது.
அன்னாசிப்பழத்திலுள்ள தாதுப் பொருளான கொப்பர் (Copper) செங்குருதிக்கலங்களின் உற்பத்தியில் பங்காற்றுகின்றது. பொற்றாசியம் (Potassium) இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்தை குறைப்பதுடன் இரத்தச் சுற்றினை சீராகப் பேணுகின்றது. இதயத்தின் சீரான தொழிற்பாட்டுக்கு உதவுவதுடன் இதய நோய்களிலிருந்து காக்கின்றது. எனவே அன்னாசிப்பழத்தை உங்கள் மெனுவில் சேருங்கள்