யாழில் நான்கு மணி நேரம் கிணற்றுக்குள் பதுங்கியிருந்த பெண்!!

277

யாழ்ப்பாணம் வடமராட்சியில் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத பெண்ணொருவர் நீண்ட நேரமாக கிணற்றுக்குள் பதுக்கியிருந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு பயந்து நான்கு மணி நேரமாக குடும்ப பெண் ஒருவர் கிணற்றுக்குள் ஒழிந்திருந்துள்ளார்.

வடமராட்சி பகுதியில் ஒரு பெண் குடும்பத்தின் கஸ்ட நிலை காரணமாக 3 நிதி நிறுவனத்திடம் இருந்து கடனை பெற்றிருந்தார். பெற்ற கடனுக்காக வாராந்தம் பணத்தை செலுத்தி வந்துள்ளார்.
இறுதியில் அவரால் வாராந்தம் செலுத்த முடியாமல் போன போது, இரு வாரங்களின் பின்னர் 3 நிதி நிறுவனங்களின் ஊழியர்களும் பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பெண்ணின் வீட்டுக்கு சென்றவர்கள் தகாத வார்த்தைகளை பிரயோகித்துள்ளனர். வீட்டை விட்டு செல்ல மாட்டோம் என கூறி அங்கேயே இருந்துள்ளனர்.

குறித்த பெண் அவர்களுக்கு பயந்து அருகிலுள்ள காணியில் இருந்த கிணற்றில் இறங்கி பதுங்கி இருந்துள்ளார். நான்கு மணி நேரமாகியும் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டை விட்டு செல்லாத காரணத்தினால் அவர் நான்கு மணி நேரமும் கிணற்றுக்குள்ளேயே பதுங்கி இருந்துள்ளார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்ற பின்னே அவர் வெளியே வந்துள்ளார்.

நுண்கடன் திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் ஆராய மத்திய வங்கி ஆளுநர் குமாரசுவாமி இந்திரஜித், வடபகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒன்றுகூடலின் போது பாதிக்கப்பட்ட பெண் இந்த தகவலை வெளியிட்டார். கடந்த ஆறாம் ஏழாம் திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு சென்ற மத்திய வங்கி ஆளுநர், நுண்கடன் குறித்து ஆராய்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.