இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் கைது!!

248

போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நாதன் பார்தீபன் என்ற புகலிட கோரிக்கையாளரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

போராட்டத்திற்கு தூண்டியதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கை தமிழர்கள் பலர் இந்தோனேஷியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சுமார் 300க்கும் மேற்பட்ட ஈழ புகலிட கோரிக்கையாளர்கள் இந்தோனேஷியாவின் வட சுமத்திரா மாகாணத்தில், மெடானில் எனும் இடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த அனைவரும், மீளவும் இலங்கைக்கு செல்ல முடியாதவர்கள் என்பது உறுதிப்படுத்திய நிலையில், அகதி அந்தஸ்த்து பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதை ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், குறித்த அனைவருக்கும் அகதி அந்தஸ்த்து வழங்கி வேறு நாடுகளுக்குச் செல்வதற்கு இந்தோனேஷிய அரசாங்கம் மறுப்பு வெளியிட்டு வருவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழ அகதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில், தம்மை வேறு நாடுகளுக்கு அனுப்புமாறு கோரி அகதிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.