பொதுநலவாய மாநாட்டை நடத்த இலங்கைக்கு தகுதி இல்லை : ரணில் விக்ரமசிங்க!!

346

Ranil

இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியா பொதுநலவாய விழுமியங்களை மீறி வருவதால் எதிர்வரும் பொதுநலவாய மாநாட்டுக்குத் தலைமை தாங்குவதற்கு இலங்கைக்கு தகுதி இல்லை என்று இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

அதனால் பொதுநலவாய மாநாடு தொடர்பில் உறுதியான நிலைப்பாடொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி அறிவித்திருக்கிறார்.

சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு, சுதந்திரமான நீதிச்சேவை ஆணைக்குழு மற்றும் பொதுச் சேவைக்குழு ஆகியன இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று பொதுநலவாய கண்காணிப்புக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ள நிலையிலும் அதுபற்றி அரசாங்கம் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சுயாதீனமான பொலிஸ் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழுக்கள் இல்லாதபடியாலேயே நாட்டில் அரசியல் ரீதியான கைதுகள் நடப்பதாகவும் கூறிய ரணில் விக்ரமசிங்க, மங்கள சமரவீரவின் கைது நடவடிக்கை ஜனநாயகத்தையும் எதிர்க்கட்சியையும் ஒழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் பொதுநலவாய தலைவர்கள் மாநாடு நடாத்துவது நகைப்பிற்குரியது எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.