வவுனியாவில் நடு இரவில் வீடு புகுந்து சிறுமியை கடத்த முயற்சி : சந்தேகநபர்களை கைது செய்யாத பொலிஸார்!!

326

 
வவுனியாவில் சிறுமி ஒருவரை நடு இரவில் வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்று 14 நாட்களாகியும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா கீரிசுட்டான் கிராமத்தில் 10 வயது சிறுமியை நடு இரவில் வீடு புகுந்து தூக்கிச் சென்ற மர்ம நபர்களுடையது என சந்தேகிக்கும் செருப்பு மற்றும் சந்தேகநபர்கள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கயிறு போன்றன பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமையானது கிராமத்தில் அச்ச நிலைய உருவாக்கியுள்ளது.

வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் 12ஆம் திகதி நடு இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் நித்திரையில் இருந்த சிறுமியை தூக்கிச் சென்ற வேளையில், குறித்த சிறுமியின் தந்தை விழித்துக்கொண்ட நிலையில் கடத்தல்காரனை துரத்திச் சென்ற போது சிறுமியை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 13ஆம் திகதி காலையில் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்ற நெடுங்கேணி பொலிஸார் தடயப்பொருட்களை கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த சிறுமி கடத்தல் முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்யாத காரணத்தினால் மீண்டும் 20-ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தாங்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருவதாகவும் உடனடியாக இச்சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அத்ததுடன் 23ஆம் திகதி வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்த நிலையிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை.