போக்குவரத்து விழிப்புணர்வை ஏற்படுத்த 1100 கிலோமீட்டர் பைக் ஓடி சாகசம் செய்த அஜித்!!

329

ajithநடிகர் அஜித் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக இருந்தார். சினிமா நடிகராக பிரபலமாகிய பின் அவர் சர்வதேச அளவில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டார். பொதுமக்கள் மத்தியில் போக்குவரத்து விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காக அவர் சமீபகாலமாக ஹெல்மட் அணிந்தபடி நீண்ட தூரம் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருகிறார்.

இதற்காக அவர் பி எம் டபிள்யூ கே 1300 எஸ் என்ற நவீன வசதிகளை கொண்ட மோட்டார் சைக்கிள் வாங்கியிருக்கிறார். இந்த மோட்டார் சைக்கிளிலும் அவர் அணிந்து கொள்ளும் ஹெல்மெட்டிலும் கேமரா பொருத்தப்பட்டு இருக்கிறது. அதோடு அந்த ஹெல்மெட்டில் புளூ டூத் வசதியும் இருக்கிறது.

இந்த நவீன மோட்டார் சைக்கிளில் அஜித் கடந்த மாதம் சென்னையில் இருந்து பெங்களூர் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளிலேயே சென்னைக்கு திரும்பினார்.

அஜித் நடித்த ஆரம்பம் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்தின் இணைப்பு வேலை மும்பையில் நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக அஜீத்குமார் மும்பை சென்றார். மும்பையில் ஆரம்பம் பட வேலையை முடித்துக்கொண்டு அங்கிருந்து மராட்டிய மாநிலம் புனே சென்று வீரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

அவருடைய மோட்டார் சைக்கிள் விமானம் மூலம் புனேக்கு கொண்டு வரப்பட்டது. புனேயில் வீரம் படப்பிடிப்பு முடிந்ததும் அஜீத்குமார் மீண்டும் தனது மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு அவர் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர் மனோகர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தார். வழியில் இருவரும் பெங்களூரில் 3 மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டார்கள். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டார்கள்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு இருவரும் சென்னை வந்து சேர்ந்தார்கள். புனேயில் இருந்து 16 மணி நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு வந்து சாதனை புரிந்து இருக்கிறார், அஜீத்குமார்.

புனேயில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் ஓடி வந்த அனுபவம் பற்றி நடிகர் அஜித்குமார் கூறும்போது..

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள்தான் அதிக அளவில் விபத்தில் சிக்குகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியாதவர்கள் விபத்தில் மரணம் அடைய நேர்கிறது. ஹெல்மெட் அணிவதன் அவசியத்தையும், போக்குவரத்து விழிப்புணர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காகவே நான் மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்கிறேன்.

புனேயில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிள் ஓடி வந்தது ஒரு தியானம் போல் இருந்தது. ஒரு தவம் போல் இருந்தது. இவ்வாறு அஜித்குமார் கூறினார்.