வவுனியாவில் சிறுவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் : 22 சிறுவர்களுக்கு பரிசோதனை!!

609

abuseவவுனியா அட்டம்பகஸ்கடவில் உள்ள சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார் என்று செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து அந்த இல்லத்தைச் சேர்ந்த 22 சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்காக கொழும்புக்குக் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையைச் சேர்ந்த அதிகாரிகள் கொழும்பில் இருந்து நேரடியாக வந்து அங்கு விசாரணைகளை நடத்திய பின்னர் அந்த இல்லம் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிக்கப்பட்டுள்ள சிறுவன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அந்த சிறுவனை கொழும்புக்குக் கொண்டு சென்று அங்கும் வைத்திய பரிசோதனை செய்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

ஆரம்பகட்ட விசாரணைகளில் அட்டம்பகஸ்கட சிறுவர் இல்லத்தை நடத்தி வருகின்ற மதகுரு ஒருவரே குறிப்பிட்ட சிறுவனைத் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. ஆயினும் அவர் இன்னும் பொலிஸாரால் கைது செய்யப்படவில்லை.

அவர் மீது சந்தேகம் ஏற்பட்டிருந்த போதிலும் முறையான விசாரணைகள் நடத்தப்படவில்லை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊழியர் சங்கத்தினர் கண்டனம் வெளியிட்டிருக்கின்றனர்.