தேர்வில் கொப்பியடித்து மாட்டி கொண்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவை சேர்ந்தவர் துருவராகமவுலிகா (18). இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு கணணிப் பொறியியல் படித்து வந்தார்.
தற்போது தேர்வுகள் நடந்து வரும் நிலையில், நேற்று காலை மாணவி தேர்வில் கொப்பி அடித்ததாக கூறி தேர்வு அறையில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றியதால் மனமுடைந்த அவர் நேராக விடுதிக்கு சென்றார்.
அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது சகோதரர் ராஜேஷ்ரெட்டிக்கு தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக துருவராகமவுலிகா செல்போனில் மெசேஜ் அனுப்பினார்.
இதை பார்த்த ராஜேஷ் உடனடியாக சகோதரி தங்கியுள்ள விடுதி அறைக்கு வந்தார். அங்கு அறை தாழிடப்பட்டிருந்ததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, அங்கே துருவராகமவுலிகா தூக்கில் சடலமாக தொங்கினார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.