ஏழு வருடங்கள் போராடி தான் திருமணமாகாதவர் என நிரூபித்த நடிகை!!

520

பாகிஸ்தானில் புகழ்பெற்ற நடிகை மீரா (40) பொலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பைசலாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரஹ்மான் என்பவர் தனக்கும் மீராவிற்கும் 2007 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றதாக அறிவித்தார்.

தன்னை கணவர் என்று மீரா வெளிப்படையாகக் கூறாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ரசிகர்களிடம் மீரா தாம் திருமணம் ஆகாதவர் என்று கூறி வருவதாகம் ஆதிக் உர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

மீரா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும் என்றும் வெளிநாடுகள் செல்ல மீராவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரஹ்மானின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவரின் திருமண சான்றிதழை எதிர்த்தும் 2010 ஆம் ஆண்டு எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.

திருமணம் குறித்து இது மாதிரியான பல வழக்குகளை சந்தித்துள்ளது பாகிஸ்தானிய குடும்பநல நீதிமன்றங்கள். ஆனால், இதில் பிரபலம் சம்பந்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், கடந்த வாரம் மீரா யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என ரஹ்மான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது லாகூர் சிவில் நீதிமன்றம்.

இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி, திருமண சான்றிதழ் உண்மையா, போலியா என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை , ஆனால் குடும்பநல நீதிமன்ற சட்டம் 1964 இன் படி மீரா வேறொரு திருமணம் செய்து கொள்வதைத் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

ஆனால், அந்த திருமண சான்றிதழ் உண்மை தான் என தெரிய வந்தால் அதற்கான சட்ட விளைவுகளுக்கு மீரா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

எனினும், இதனை வெற்றியாகக் கருதிய மீரா, “இறுதியாக தனக்கு நீதி கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.