ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை : டோனி ஆவேசம்!!

306

Dhoni pressநேற்று டெல்லியில் இடம்பெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இஷாந்த் சர்மாவின் மோசமான பந்து வீச்சால், அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது இந்தியா. இதனால் தலைவர் டோனி இந்திய பந்து வீச்சாளர்களை குறிப்பாக வேகப் பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார்.

போட்டி முடிவில் செய்தியாளர்களிடம் பேசியபோது தனது கோபத்தை மறைமுகமாக வெளிக்காட்டினார் டோனி. வழக்கமாக வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்ளும் டோனி இதற்காகவே கேப்டன் கூல் என செல்லமாக அழைக்கப்பட்டார்.

ஆனால் அவரையே ஆவேசப்பட வைக்குமளவுக்கு இருந்தது நேற்றைய இந்திய அணியின் பந்துவீச்சு. நேற்றுப் பகல் ஆரம்பமான இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா டோனியின் அபார சதத்தால் 303 ஓட்டங்களை விலாசியது.

இதன்படி 304 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி ஒருகட்டத்தில் 213 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இந்த இக்கட்டான நிலையில் களத்தில் இருந்த வோக்ஸ்-பாக்னர் ஜோடி விக்கெட் வீழ்ச்சியை கட்டுப்படுத்தி நிதானமாக விளையாடினர்.

வோக்ஸ் அரை சதம் கடந்து இரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனாலும் இந்தியாவின் பக்கம்தான் வெற்றி வாய்ப்பு இருந்தது.
47 ஓவர்கள் முடிவில் வெற்றி பெற வேண்டுமாயின் 44 ஓட்டங்கள் தேவைப்பட்டன. அப்போதுதான் ஆஸி. அணிக்கு கைகொடுக்க வந்தார் இஷாந்த் சர்மா.

இவர் வீசிய 48வது ஓவரில் சிக்சர்களாக விளாசிய பாக்னர் 30 ஓட்டங்களை குவித்தார். இதனால் அவுஸ்திரேலியா வெற்றிப் பாதைக்கு திரும்பியது.

49வது ஓவரில் 5 ஓட்டங்களை எடுத்தனர். கடைசி ஓவரில் 9 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் ஒற்றை ஓட்டமும் அடுத்த பந்தில் ஓட்டங்களும் அடித்த பாக்னர் 3வது பந்தில் அதிரடியாக சிக்சர் விளாசி வெற்றியை உறுதி செய்தார்.

இதனால் 3 பந்துகள் மீதமிருந்த நிலையில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இது குறித்து டோனி கூறுகையில் கடைசி ஓவர்கள் நமக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்து விட்டது. அதுதான் கவலைக்குரியதாக ஆரம்பத்திலிருந்தே இருந்தது. நேற்று மோலும் மோசமடைந்து விட்டது.

நேற்று பனி இருந்தது. என்றாலும், கடைசிப் போட்டியில் இருந்தது போல அதிகம் இல்லை. பந்து வீச்சாளர்கள் பந்து வீச வரும்போது சிந்தனையுடனும் திட்டத்துடனும் வர வேண்டும். தங்களது பலத்தை உணர்ந்து பந்து வீச வேண்டும்.

இது சர்வதேசப் போட்டி. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஸ்பூனில் வைத்து வாயில் ஊட்டி விடத் தேவையில்லை. திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றார் டோனி.

நடுக்கள பந்து வீச்சாளர்கள் பரவாயில்லை. குறிப்பாக ஜடேஜா நன்றாக வீசினார். அதேசமயம், பகுதி நேர பந்து வீச்சாளர்களும் சற்று உதவிகரமாக இருந்திருக்கலாம்.

மொஹாலியில் நாம் சிறப்பாக செயல்பக் கூடியவர்கள். இந்தப் போட்டியிலும் நாம் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்கலாம். 300 ஓட்டங்களை நாம் எட்ட முடிந்ததே அதிர்ஷ்டம்தான்.
நாம் சுதாரித்து ஆடியிருக்காவிட்டால் 250 ஓட்டங்களைக் கூட எட்டியிருக்க முடியாது என்றார் டோனி.