வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இதுவே காரணம்!சிவசக்தி ஆனந்தன்!

815

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற காரணத்திற்காக தான் நாங்கள் வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் பிரிந்து போட்டியிடவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலானது குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்த தேர்தல் நடைபெறுகின்றது.



காரணம் இந்த தேர்தல் முடிவடைந்த பிற்பாடு ஐ.நா மனிதவுரிமை பேரவையின் கூட்டம் நடைபெற இருப்பதன் காரணத்தால் அரசாங்கத்திற்கு முக்கியமான ஒரு தேவை இருக்கிறது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கான தீர்வைக் காணுவதற்காக அரசியல் வழிநடத்தல் குழுவால் 73 தடவை கூட்டப்பட்ட கூட்டத்தினுடைய இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே அந்த இடைக்கால அறிக்கைக்கான ஆணையைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கிறது.

இடைக்கால அறிக்கையில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவான விடயம்.

என்னைப் பொருத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பான எந்தவித விவாதங்களும் மேற்கொள்ளப்படாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் காலாதிகாலமாக அடிமைகளாக இருப்பதற்காக இந்த இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற காரணத்திற்காக தான் நாங்கள் வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் பிரிந்து போட்டியிட்டவுள்ளோம்.

இதற்கு அப்பால் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலம் அரசாங்கம் அன்றாட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை காணவில்லை.

அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காணவில்லை. இடைக்கால அறிக்கையில் கூட எதுவுமே இல்லாத நிலையில் தான் இந்த தேர்தலை தமிழரசுக் கட்சி சந்திக்க இருக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் மூன்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கிறார். அதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்கப்பட்டதைக் கூட கவனத்தில் எடுக்காது இந்த வரவு செலவு திட்டத்திறகு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆதரவு வழங்கியதற்கு பரிசாக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 30 கோடி ரூபாய் நிதி அபிவிருத்தி என்ற பெயரில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே பாதுகாப்பு தரப்பால் ஏற்படுத்தப்பட்ட உயிரழிவுகள், சொத்தழிவுகள், இன்னும் உட்கட்மைப்பு அழிவுகள், அபிவிருத்திகள் என பல வேலைத்திட்டங்களுக்கான எந்தவிதமான நிதி ஒதுக்குகள் கூட இல்லாத நிலையில் அரசாங்கத்தினுடைய மூன்று வரவு செலவுத்திட்டத்திற்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு இரண்டரை வருட கால ஆட்சிக் காலத்தில் உருப்படியான எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் தான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களிடம் இந்த ஆணையைப் பெற இருக்கிறது.

தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் இந்த இடைக்கால அறிக்கைக்குள் எதுவுமில்லை. இரண்டரை வருடத்தில் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

குறிப்பாக சர்வதேச சமூகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்வதை தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் மீண்டும் உள்ளூராட்சி தேர்தல் மூலம் வெளிப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

இதனை தமிழ் மக்கள் சரியாக செய்வார்கள். வடக்கு, கிழக்கு பகுதியில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படிபட்ட ஒரு புதிய அரசியல் காலாச்சாரத்தை கொள்கை ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.

அதனை இந்த உள்ளூராட்சி சபை ஊடாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.