கோஷ்டி மோதலால் பொலிஸ் நிலையம் சென்ற இயக்குனர்கள் குடும்பம்!!

288

murgadas_rameskannaஅடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பு கோரி இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ரமேஷ்கண்ணா, பேரரசு ஆகியோரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை விரும்பாக்கம் பொலிஸ் நிலையம் அருகில் சியாமளா காடன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சினிமா இயக்குனர்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுமார் 350 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

கடந்த செப்டம்பர் மாதம் 24ம் திகதி நள்ளிரவில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 கார்களில் வந்த கும்பல் அங்கிருந்த காவலாளியை தாக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட்டது. இது தொடர்பாக குடியிருப்பு வாசிகள் விருகம்பாக்கம் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

அதில், எங்களது குடியிருப்பில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனம் சரியாக செயல்படாததால் அவர்களை மாற்றிவிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.

இதனால் ஆத்திரம் அடைந்த பழைய பாதுகாப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக விருகம்பாக்கம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரையும் அவரது மகனையும் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் இயக்குனர்கள் ஏ.ஆர். முருகதாசின் மனைவி ரம்யா, ரமேஷ் கண்ணாவின் மனைவி ஷோபா, பேரரசுவின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர் டால்பின் ஸ்ரீதர் உள்ளிட்ட 50 பேர் இன்று மதியம் வேப்பேரியில் உள்ள புதிய பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரண்டனர்.

தங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த மாதம் 24ம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக எங்களது குடியிருப்பில் வசிக்கும் மாறன் என்பவரது வீட்டுக்கு சிலர் சமாதானம் பேச சென்றுள்ளனர்.

அப்போது சமாதானமாக செல்லலாம் என்று கூறி இருக்கிறார்கள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற அவர்கள் விருகம்பாக்கம் பொலிஸ் நிலையத்தில் குடியிருப்பு வாசிகள் தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக பொலிசார் விசாரிக்காமலேயே குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் எங்கள் குடியிருப்பு முன்பு வந்து சிலர் கோஷம் எழுப்பி சென்றுள்ளனர். எனவே எந்த நேரத்தில் எது நடக்குமோ என்று எங்களுக்கு பயமாக உள்ளது என்றும் குடியிருப்புக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதுடன் நிர்வாகிகள் மீது போடப்பட்ட பொய் வழக்கையும் பொலிசார் ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.