வவுனியாவில் நாளை கடையடைப்பு : ஆதரவை வழங்குமாறு வர்த்தகர் சங்கம் வேண்டுகோள்!!

491

வவுனியா மத்திய பேருந்து நிலையத்திலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உள்ளுர் பேருந்து சேவைகளை மத்திய பேருந்து நிலையத்தில் சேவை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி கடையடைப்புப் போராட்டம் நடாத்துவதற்கு வவுனியா வர்த்தகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இன்று (02.01.2018) காலை 9.30 மணியளவில் வவுனியா வர்த்தக சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் சங்கத் தலைவர் இராசரத்தினம் கிரிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நேற்று 1ம் திகதியிலிருந்து வவுனியா மத்திய பேருந்து நிலையம் வடமாகாண முதலமைச்சரின் உத்தரவிற்கு அமைவாக நகரசபையினால் மூடப்பட்டுள்ளது.

இதையடுத்து பேருந்து நிலையப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு முயன்றபோதும் பலனளிக்கவில்லை.

தற்போதும் வடமாகாண முதலமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது சாதகமான பதில் ஏற்படுத்தப்படாவிட்டால் நாளைய தினம் புதன்கிழமை வவுனியாவிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடி வர்த்தகர்களின் நியாயமான போராட்டத்திற்கு வர்த்தகர் ஆதரவினை வழங்குமாறும்,

இ.போ.ச தனியார் பேரூந்துகளின் வெளியூர் சேவைகள் புதிய பேரூந்து நிலையத்திலிருந்து இடம்பெற்று பழைய பேரூந்து நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். அத்துடன் பழைய பேரூந்து நிலையத்திலிருந்து இ.போ.ச, தனியார் பேரூந்துகள் சேவையில் ஈடுபடும் பட்சத்தில் வர்த்தகர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் இடம்பெறாதென மேலும் தெரிவித்தார்.