மூன்று முறை இறந்தாக அறிவிக்கப்பட்ட பெண், பிறந்த நாள் பாட்டின் மூலம் உயிர் பிழைத்ததை அவரது தாய் கண்ணீருடன் விளக்கியுள்ளார்.
இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த இளம் பெண் விராலி மோடி, அமெரிக்காவில் வசித்து வந்தார். 13 வயதில் அமெரிக்காவில் ஒரு பிரபல குளிர்பான விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு விராலிக்கு கிடைத்தது. இதன் மூலம் பெரிய பிரபலம் ஆகிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த விராலிக்கு, வாழ்க்கையில் பல திருப்பங்கள் நடந்தன.
விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்னர் மழைக்கால சுற்றுலாவுக்காக இந்தியாவிற்கு வந்தவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து உடனடியாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வீடு திரும்புவது, மருத்துவமனை செல்வதுமே வழக்கமாக கொண்டிருந்த இவரை மருத்துவர்கள் மூன்று முறை இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதை அறிந்த விளம்பர நிறுவனம் இவரை நடிக்க வைக்காமல் அந்த இடத்தில் வேறு யாரையோ நடிக்க வைத்துவிட்டது, அவரின் கனவும் முற்றிலும் சிதைந்தது.
விராலி மோடி குறித்து அவரது தாயார் பல்லவி மோடி கூறுகையில், என் மகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அவளுக்கு சிறுநீர், இரத்தம் மற்றும் சி.டி. ஸ்கேன் போன்ற பரிசோதனைகள் எல்லாம் எடுத்தோம், அதில் அவளுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று வந்தது.
இதையடுத்து விராலி ஒரு கட்டத்தில் முற்றிலுமாக நிலைகுலைந்து வாந்தி எடுத்தால், இதய துடிப்பு நின்றது, இதை அறிந்த மருத்துவர்கள் மகள் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இருப்பினும் மருத்துவர்களின் கடைசி கட்ட போராட்டத்தால் விராலியின் இதயத்தைத் துடிக்க வைத்தனர். இதயம் மட்டும் துடித்ததே தவிர சுவாசம் நின்றுவிட்டது, செயற்கை சுவாசகருவிகள் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த சிகிச்சையால் அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். முயற்சி செய்து வந்த மருத்துவர்கள், கடைசியில் இனி எந்த முயற்சியும் பலனிருக்காது செயற்கைக் கருவிகளை அகற்றிவிடலாம் என்று முடிவு செய்தனர்.
நான் அந்த நேரத்தில் என் மகளுக்கு 15வது பிறந்த நாளுக்கு இன்னும் 8 நாட்ளே உள்ளன, அதுவரை இவள் உயிருடன் இருக்கட்டும் என்று கூறினேன். முதலில் மறுத்த மருத்துவர்கள், என்னுடைய நிலையைக் கண்டு சம்மதம் தெரிவித்தனர்.
நான் சொன்னது போன்றே குறித்த நாளில் மருத்துவமனையில் இருந்த கடிகாரம் 3.05 ஐ நெருங்கியது. அதுதான் விராலி பிறந்த நேரம் என்பதால், நாங்கள் அனைவரும் அவளது படுக்கை சுற்றி நின்று, ஹப்பி பர்த்டே பாடலைப் பாடினோம். அவளது தந்தை, அவளின் கையைப் பிடித்து கேக் வெட்டினார். அந்த நேரம் அவள் கண் திறந்தாள். இதை கண்ட நாங்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தோம்.
உடனடியாக வந்த மருத்துவர்கள் என்னைக் கட்டியணைத்து, உங்களால்தான் உங்கள் மகள் பிழைத்துக்கொண்டிருக்கிறாள் என்று கூறிய போது, கண்களில் கண்ணீர் கொட்டியது என்று கூறியுள்ளார்.
மீண்டும் சிகிச்சைகள் தொடங்கின, மெதுவாக குணமடைந்து வந்த விராலி தற்போது சுறுசுறுப்பான பெண்ணாக உள்ளார். இன்று சக்கர நாற்காலியில் உலா வரும் விராலி, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.






