வவுனியாவில் நிதி நிறுவனத்தில் மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

461

 
வவுனியாவிலுள்ள நுண்நிதி நிறுவனத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு சொகுசு வாகனம் ஒன்றினை 37 இலட்சம் ரூபா பெறுமதியான லீசிங்கில் பெற்றுக்கொள்வதற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து பிணையாளியின் விண்ணப்பம் பெறப்பட்டு வாகனம் பெறப்பட்டுள்ளது.

குறித்த பிணையாளி தனிப்பட்ட கடன் பெற்றுக்கொள்வதற்கு தற்போது வங்கிக்கு சென்றுள்ளார். இதன்போது அடையாள அட்டை சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த நபரின் அடையாள அட்டையை பயன்படுத்தி வாகனம் பெற்றுக்கொள்வதற்கு பிணை அனுமதிப்பத்திரம் தயார் படுத்தப்பட்டுள்ளதுடன் மிகுதி நிலுவையாக ஏழு இலட்சம் ரூபா செலுத்த வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா பஜார் வீதியிலுள்ள பிரபல நுண்நிதி நிறுவனத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு தோணிக்கல் பகுதியிலுள்ள ஒருவர் அவரது சகோதரியின் அடையாள அட்டையின் பிரதியில் விண்ணப்பம் ஒன்று வழங்கியுள்ளார்.

அதை ஏற்றுக்கொள்ள நுண்நிதி நிறுவனம் மறுத்துள்ளது. இதையடுத்து குறித்த நபரால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தினைப் பெற்றுச் சென்றிருந்தார்.

இதையடுத்து வங்கியில் அடையாள அட்டையினை பரிசோதனை மேற்கொண்ட உத்தியோகத்தர் “உங்களின் அடையாள அட்டையை பயன்படுத்தி சொகுசு வாகனம் ஒன்று பெறப்பட்டுள்ளது. அத்துடன் மிகுதி நிலுவையாக ஏழு இட்சம் ரூபா செலுத்திவேண்டியுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து எந்த நிறுவனம் என தெரிந்து கொண்ட குறித்த பெண் அந்நிறுவனத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்று நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தற்போது நுண்நிதி நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றும் உத்தியோகத்தர் முன்னர் இருந்த பெண் முகாமையாளர் தற்போது கடமையில் இல்லை என தெரிவித்து இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளார்.

இதையடுத்து இன்று அந்நிறுவனத்திற்குச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் தனது அடையாள அட்டையிலுள்ள பிணை நிலுவையை இரத்துச் செய்து தருமாறு தெரிவித்துள்ளார்.

நுண்நிதி நிறுவனங்கள் தமது வியாபார நோக்கத்திற்காக இவ்வாறான போலி ஆவணங்களைத் தயார்செய்து தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதை நிறுத்துவதுடன் வடபகுதியிலுள்ள மக்களை மேலும் துன்பத்திற்கு இட்டுச் செல்ல வழி அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது.

நுண்நிதி நிறுவனத்திலிருந்து தமக்குச் சாதகமான பதில் கிடைக்காது எனத் தெரிந்து கொண்ட குறித்த பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.