ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் அடித்து புதிய சாதனை படைத்த வீரர்!!

336

தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர் ஜேபி டுமினி, முதல் தர கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் முதல் தர போட்டியில், கேக் கோப்ராஸ் அணிக்காக டுமினி விளையாடி வருகிறார்.

இந்நிலையில் நைட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 240 ஓட்டங்கள் இலக்கினை விரட்டியது கோப்ராஸ் அணி. அந்த அணியில் களம் இறங்கிய டுமினி, 36வது ஓவரில் எடி லெயி வீசிய பந்துவீச்சை சிதறடித்தார்.

முதல் நான்கு பந்துகளை சிக்சர்களாக விளாசிய டுமினி, ஐந்தாவது பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்தார். கடைசி பந்தை பவுண்டரிக்கு அவர் விளாசிய போது, நடுவர் அந்த பந்தை ‘No ball’ என்று அறிவித்தார். இதனால் மீண்டும் ஆறாவது பந்தை எதிர்கொண்ட டுமினி, அதனை இம்முறை சிக்சராக மாற்றினார்.

இதன் மூலம் ஒரே ஓவரில் 37 ஓட்டங்கள் சேர்த்து, உள்ளூர் போட்டி வரலாற்றிலேயே ஒரே ஓவரில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

சிறப்பாக விளையாடிய டுமினி 37 பந்துகளில் 70 ஓட்டங்களை குவித்து, கோப்ராஸ் அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.