வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 5 வயதுச் சிறுவன்!!

304

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.

யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே இறக்கி வைக்கும்படிக் கூறியுள்ளார்.

மறுத்த அவன், பையைக் கழற்றினால் அதனுள் வைக்கப்பட்டுள்ள குண்டு வெடித்துவிடும் என்று கூறியுள்ளான்.

உடனடியாக அவனது தந்தைக்குத் தகவல் தெரிவித்த பள்ளி நிர்வாகம் அவன் ஒரு நாள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவனை வந்து அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளது.

பள்ளிக்கு வந்த சிறுவனின் தந்தை, மகன் இடை நீக்கம் செய்யப்படுவதற்கான காரணத்தைக் கேட்டுள்ளார்.

சட்டப்படி அப்படித்தான் செய்ய முடியும் என்று கூறிய பள்ளி நிர்வாகம் அவன் வேண்டுமென்றே மிரட்டல் விடுத்ததாகத் தெரிவித்தது.

பின்னர் சிறுவன் தீவிரவாத மிரட்டல் விடுத்ததாக மாற்றிக் கூறிய பள்ளி அவனது தவறை நிரந்தரக் கருப்புப் புள்ளியாக பதிவு செய்துள்ளது.

அவ்வாறு பதிவு செய்துள்ளதை நீக்க விரும்பும் சிறுவனின் பெற்றோர் அவன் வெடிகுண்டு என்று கூறியது தவறுதான் என்றாலும் அவனை நாங்கள் கடிந்துகொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

சிறுவனிடம் அவன் ஏன் அப்படிச்செய்தான் என்று கேட்டபோது, தான் வேடிக்கைக்காகவே செய்ததாகப் பெற்றோரிடம் கூற “எல்லோருக்கும் வேடிக்கைக்காக இவ்வாறு செய்வது பிடிக்காது” என்று மட்டும் அறிவுறுத்தியதாகவும், அவன் எப்போதும் ஒரு மகிழ்ச்சியான சிறுவனாகவே இருப்பதை அவர்கள் விரும்புவதாகவும் தெரிவித்தனர்.