நம்பிக்கை வந்தால் மக்கள் நம்பி கை கொடுப்பார்கள்!!

911

கவிஞர் அறிவுமதியின் பாடல் வரிகளை இளையராஜாவின் குரலில் கேட்கும் போது ஒருவிதமான ஏக்க உணர்வு எதுவும் புரியாமல் இதயத்தில் வந்துபோகும். இப்போது ரஜினியும், கமலும் சொல்லும் அரசியல் பாதையும் அப்படிப்பட்ட ஒரு உணர்வைத்தான் தமிழக மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடமும் அதனால் பலர் கட்டி வைத்துள்ள கற்பனை கோட்டையும், ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஒரு சேர ஏற்படுத்தி இருக்கிறது.

ரஜினியும், கமலும் திரை உலகில் கொடிகட்டிப் பறப்பவர்கள். இருவரும் நண்பர்கள். என்றாலும் தொழில் ரீதியில் இரு துருவங்கள். இன்று வரை இவர்களுடைய ரசிகர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். நடிப்பு, நம்பிக்கை, கொள்கை மூன்றிலும் மாறுபட்டவர்கள்.

அரசியல் தளமும் இருவருக்கும் புதிது. சினிமாவில் நடித்தால் போதும். அரசியலுக்கு இந்த புகழ் மட்டுமே கைகொடுக்காது என்பது இவர்களுக்கு தெரியாததல்ல.

இருவரும் அவரவர் பாணியில் அரசியல் பந்தை கச்சிதமாக நகர்த்தி வருகிறார்கள். இவர்களில் யார் கோல் அடிப்பார்கள் என்பது தான் எதிர்பார்ப்பாக இருந்தது.

ரஜினி ஆன்மீக அரசியல் என்றதும் புதிதாக தெரிந்தது இன்னும் பலரால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை. அது விமர்சனங்களையும் தாண்டி ரஜினி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.

இணைய தளத்தில் நின்று அதிரடிகளை நிகழ்த்திய கமலின் விசுவரூபம் எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அவரும் இதோ அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்தார்.

ஏதாவது செய்யாமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தால் இந்த சமூகம் மன்னிக்காது என்ற கரிசனத்தோடுதான் இருவருமே அரசியலுக்கு வருவதாக முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள். கேட்டதும் பரவாயில்லையே என்று தோன்றினாலும் இது காலத்தே எடுத்த முடிவா? காலம் அறிந்து எடுத்த முடிவா? என்பதற்கு அவர்கள் அக்கறை காட்டுவதாக சொல்லும் சமூகம் தான் விடை சொல்லும்.

இருவரது அரசியல் பயணமும் பல எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தாலும், இருவர் செல்லும் பாதையும் எங்கெங்கே செல்லும்? என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

ஆண்ட கட்சி, ஆளும் கட்சிகளை மக்கள் பார்த்துவிட்டதால் அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் புதுமையாய் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் இப்படி மாறுபட்ட பாதையை இவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறது.

இவர்கள் மனதில் தங்களது திட்டத்துக்கு ஒரு கற்பனை வடிவம் கொடுத்து அதையே வெற்றிக்கான இலக்காக கருதலாம். ஆனால் அந்த கற்பனை வடிவம் எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரிந்தால் தான் அதன் மீது அவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும் என்பதை உணரவேண்டும்.

கமல் நேரடியாக களத்துக்கு வருவார் என்ற நம்பிக்கையை அவரது சுற்றுப்பயணம் கொடுக்கலாம். ஆனால் ‘திராவிடம்’ என்பதோடு நின்று கொண்டிருந்த கமல் இந்தியாவை தனது ஆயுளுக்குள் பெருமை அடைய செய்வேன் என்று சொல்லி இருப்பது ஆசையின் விளைவா? அது தான் கைக்கொடுக்கும் என்ற நம்பிக்கையா?

தேசிய கட்சிகள் இரண்டும் எழுந்து நடமாட முடியாத நிலையில் இருப்பதால் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தேசியம் என்ற சொல் பயன்படும் என்பதற்காக ஒருவேளை விதைத்து போட்டிருக்கலாம்.

கல்வி, சுகாதாரம், மருத்துவம் எதுவும் சரியில்லை. நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்தில் கிடைக்கவில்லை. போக்குவரத்து நெரிசல் தீர்ந்தபாடில்லை என்பது சுதந்திரம் பெற்ற பிறகு தேர்தலுக்கு தேர்தல் சொல்லி வருவது தான். ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு உரித்தான பாணியில் வார்த்தை ஜாலத்தோடு அறிவித்து வாக்குகளை அள்ளி விடுகின்றன.

ஆனால் குறைகள் மட்டும் குறைகளாகவே இருப்பது தெரிந்தது தான். இந்த சூழ்நிலையில் ஆறிப்போன உணவை சூடாக்கி சில துளி நெய்விட்டு மணக்க மணக்க முன்னே கொண்டு வைத்துள்ளார்கள் என்று தான் நினைக்க தோன்றுகிறது.

இந்த நினைப்புக்கு காரணம், தமிழகத்தின் நிலைமை தான். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வழியில்லை. பெரும்பாலான துறைகள் நஷ்ட கணக்கில் தான் இருக்கின்றன. வரவுக்கு மிஞ்சிய செலவால் ‘‘துந்தணா..துந்தணா…’ என்ற நிலையில் சென்று கொண்டிருக்கிறது.

இதற்கான தீர்வு என்ன என்பதை தெரிந்தால் மட்டுமே இவர்கள் சொல்லும் லட்சிய பாதையில் பயணம் சாத்தியப்படும்.

பாதை கரடுமுரடாக இருக்கலாம். கண்ணுக்கு வெளிச்சம் தெரிந்தால் போதும். அந்த பாதையில் மக்களும் நடப்பார்கள்.

மாற்றம் என்று சொல்வது எளிது! அது எப்படி? என்பதற்கான விளக்கம் தெளிவாக தெரிந்தால் மட்டுமே மக்களுக்கு தெளிவு பிறக்கும்- நம்பிக்கை வரும்.

இருவரில் இதை தெளிவுபடுத்துவது யாரோ அவரே அரசியலிலும் நாயகனாக உருவெடுக்க முடியும்.