பாகிஸ்தானில் திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறக்கும் தருவாயில் தமது கொலைகாரன் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் Kohat பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின்போது தமது உறவின பெண் ஒருவருடன் ரிக்ஷா ஒன்றில் பயணத்தில் இருந்துள்ளார் இளம்பெண் Aasma Rani. மருத்துவ மாணவியான இவரை பல மாதங்களாக தொடர்ந்து திருமண கோரிக்கையுடன் அணுகியுள்ளார் இளைஞர் ஒருவர்.
ஆனால் மாணவி ஆஸ்மா தமக்கு இதில் விருப்பம் இல்லை என பலமுறை மறுப்பு தெரிவித்தும் வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ஆஸ்மா தனது உறவினருடன் செல்லும்போது மீண்டும் குறித்த நபர் தம்மை திருமணம் செய்துகொள்ளும்படி கோரியுள்ளார்.
அப்போதும் மறுப்பு தெரிவிக்கவே பட்டப்பகலில் அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை உருவி ஆஸ்மா மீது மூன்று முறை சுட்டுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆஸ்மாவை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
இந்த நிலையில் குற்றுயிராக இருந்த ஆஸ்மா தாம் இறக்கும் தருவாயில் தமக்கு நேர்ந்த கொடுமைக்கு காரணம் Mujahid Afridi என்ற நபர் எனவும், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாலையே அவர் துப்பாக்கியால் சுட்டார் எனவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குற்றவாளி யார் என தெரிந்தும் இதுவரை அவரை கைது செய்யவில்லை என ஆஸ்மாவின் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.






