ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கமானது இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அமெரிக்க புவியியல் மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஆப்கானிஸ்தானின் வடபகுதியில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் பூமிக்கு அடியில் 191 கி.மீ ஆழத்தில் இன்று நண்பகல் 12.30 மணி அளவில் சக்தி வாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.1 அளவாகப் பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு டெல்லி, ஜம்மு மற்றும் காஷ்மீர், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. இதனால் வீடுகளில், கடைகளில், வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி சாலைக்கு வந்துள்ளனர்.






