வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சர்வதேசத்திற்கு விடுக்கப்படும் கோரிக்கை!!

598

 
சர்வதேசம் எமது பிரச்சினைகளில் தலையிடவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை விட்டுள்ளதுடன், காணாமல் ஆக்கப்பட்ட எவரும் இல்லை. அவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்துக்கு தமது கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.

நாங்கள் எமது பிள்ளைகளை, கணவனை இராணுவத்திடம் ஒப்படைத்துள்ள நிலையில் எங்களுடைய பிள்ளைகள் எங்கும் இல்லை. நட்ட ஈடு பெற்றுத்தருவதாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்திற்கு இன்று வவுனியாவில் கடந்த 348 ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்ட ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளனர். இதில் அவ் அமைப்பின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா தெரிவித்ததாவது,

இறுதி யுத்தத்தின்போது நாங்கள் ஓமந்தை இராணுவச் சோதனைச்சாவடியில் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். நாங்கள் காணாமற்போன எமது பிள்ளைகளுக்காக போராட்டம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போகச் செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

தேர்தல் காலங்களிலேயே எமது ஜனாதிபதியையோ, பிரதமரையோ எமது மக்கள் பிரதிநிதிகளையோ காணக்கூடியதாக இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் வைத்து நேற்று (05.02) ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு பதிலினை வழங்கவுள்ளோம்.

காணாமலாக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்காகவே போராட்டத்ததை மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் ஆதாரங்களுடனே இந்த மேடையிலிருந்து போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த ஒருவருடமாக விடுதலை செய்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி ஒருவருடம் கடந்த நிலையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவருக்கு நாங்கள் எமது எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம்.

இரண்டு கிழமைக்குள்ளே எமது பிள்ளைகளை விடுதலை செய்வதாகவே ஜனாதிபதியின் செயலாளர் எமது வீட்டிற்கு வந்து தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவருக்கு அருகிலுள்ள எனது பிள்ளையை விடுதலை செய்ய முடியாத ஜனாதிபதி இன்று காணாமற்போன எல்லோரும் இல்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டார்.

நாங்கள் நட்டஈடு கேட்டா கடந்த 348 நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றோம்?. எங்களுடைய பிள்ளைகள் எங்களிடம் வரவேண்டும். நாங்கள் உயிருடன் ஒப்படைத்த எமது பிள்ளைகள் இன்று எமது இடங்களுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தான் இப்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

ஓமந்தை சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இராணுவத்தினரிடம் நாங்கள் எமது பிள்ளைகளை ஒப்படைத்தோம். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளட்டும். எங்கே போனார்கள். எவ்வாறு ஜனாதிபதி இல்லை என்று சொல்லமுடியும்? ஜனாதிபதியுடன் நிற்கின்ற பிள்ளைக்கு என்ன பதிலைச் சொல்லப்போகின்றார்? இல்லை என்று எவ்வாறு சொல்ல முடியும்? எங்களுடைய பிள்ளைகளுக்கு ஜனாதிபதி நட்ட ஈடு தரமுடியுமா? அவருக்கும் பிள்ளைகள் இருக்கின்றன. மனைவியும் இருக்கின்றார். ஜனாதிபதியின் மனைவி கேட்கட்டும் எமது பிள்ளை இல்லை நட்டஈடு தருகின்றார்கள் பெற்றுக்கொள்ளுவோமா என்று கேட்டுப்பார்க்கட்டும். மனைவியின் பதிலைக்கேட்டுத் தெரிந்துகொள்ளட்டும்.

ஒரு பிள்ளையைப் பெற்ற தாய் நட்டஈடா கேட்பாள்?. அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு பெறுமதி சொல்வாரா? தயவு செய்து எங்களுடைய பிள்ளைகளை விடுதலை செய்யவேண்டும். நீங்கள் யாழப்பாணம் சென்றது தேர்தல் பிரச்சாரத்திற்கு. ஏன் எங்களுடைய பிரச்சினைகளில் தலையிடுகின்றீர்கள்? எங்களுடைய பிரச்சினை நாங்கள் அரசியலாக்கவில்லை அதனூடாக கேட்கவுமில்லை. உங்கள் மீது நம்பிக்கை அற்றநிலையிலேயே நாங்கள் வெளிநாடுகளிடம் கேட்டுக்கொண்டு இருக்கின்றோம். இங்குள்ள தாய்மார்களின் கண்ணீரைப்பார்த்து வெளிநாடுகள் உடனடியாக வந்து இறங்கவேண்டும்.

யுத்தகாலத்தில் கடமையிலிருந்த இராணுவத்தினரை விசாரிக்கவேண்டும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவை விசாரணை மேற்கொள்ளவேண்டும். மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சுகாதார அமைச்சராக கடமையாற்றிய நீங்களும் பதிலளிக்கவேண்டும். நீங்களும் அழிவுகளை சந்திக்கும்போது தான் உங்களுக்கும் தெரியவரும். இவ்விடயத்தில் வெளிநாடுகள் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் உட்பட உடனடியாக தலையிட வேண்டும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.