கரையொதுங்கும் மீனவர்களின் சடலங்களால் பரபரப்பு! பலி 59 ஆக உயர்வு! ஆழ்கடலிலும் தேடுதல்

406

 

தென்னிலங்கையில் கடந்த சனிக்கிழமை வீசிய சூறைக்காற்றினால் காணாமற்போன 17 மீனவர்களின் சடலங்கள் நேற்றைய தினம் மட்டும் கரையொதுங்கியதால் பெரும் பரபரப்பு தொடர்கிறது. கரையோர பிரதேசங்களிலும் தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கடற்படையினர் தற்போது ஆழ்கடல் பகுதியில் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு மற்றும் தெற்கு கரையோர பிரதேசங்களில் நேற்று மட்டும் 17ற்கும் அதிகமான சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இதையடுத்து இந்த சூறைக்காற்றுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 59 என கணிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 30 பேரைக் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அகுங்கல,அம்பலாங்கொட பிரதேசங்களில் 14 சடலங்களும், பம்பலபிட்டி தொடருந்து நிலைய கடற்கரையில் 2 சடலங்களும், பெந்தோட்டை பிரதேசத்தில் 1 சடலமும் கரையொதுங்கின.

ஒரேநாளில் பெரும் எண்ணிக்கையான சடலங்கள் கரைஒதுங்கியதை அடுத்து கரையோரப் பிரதேசங்களில் நேற்று பெரும் பரபரப்பு நிலை காணப்பட்டன. இந்த அனர்த்தம் ஏற்பட்டு நான்கு நாட்களாகியுள்ள நிலையில் காணாமல் போயுள்ள எஞ்சியுள்ள மீனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

காணாமற்போனவர்களை தேடும் வேட்டையில் சிறிலங்கா விமானப்படையும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்றைய தினம் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

news1 news2