என்னை கருணைக் கொலை செய்திடுங்கள் : திருநங்கையின் கண்ணீர் கடிதம்!!

283

தூத்துக்குடியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னை கருணைக் கொலை செய்து விடும்படி இந்திய அரசாங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை ஷானவி பொன்னுசாமி. 26 வயதான இவர், கடந்த 2010ஆம் ஆண்டு தனது பொறியியல் படிப்பை, தனது பெண் தன்மையை மறைத்தே படித்து முடித்திருக்கிறார்.

அதன் பின்னர், ஏர் இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு உதவும் அதிகாரியாக பணியற்றியுள்ளார் ஷானவி. ஒரு வருட காலம் இந்த பணியை செய்த பின்னர், முறையான அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியிருக்கிறார்.

அதனுடன், தனது பெயரையும் மாற்றிக்கொண்ட ஷானவி, அதனை தமிழ்நாடு அரசிதழிலும் பதிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஷானவி தனது பெற்றோரை அணுகியபோது, அவர்கள் இவரை ஏற்க மருத்துவிட்டனர்.

அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா தேர்வுக்காக நான்கு முறை ஷானவி அழைக்கப்பட்டுள்ளார். ஆனால், ஒருமுறை கூட அவர் தெரிவு செய்யப்படவில்லை. இதனால் மனமுடைந்த ஷானவி, ஏர் இந்தியா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

ஆனால், அவர்களோ ஆண், பெண் அன்றி பிற பாலினத்தவரை வேலைக்கு சேர்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளனர். தனது பாலினத்தை காரணம் காட்டி தனக்கு வேலை மறுக்கப்படுகிறது என்றும், அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார் ஷானவி.

உச்சநீதிமன்றமும் இதுதொடர்பாக 4 வாரத்துக்குள் பதிலளிக்கக் கோரி, விமான போக்குவரத்துத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இதுவரை அவர்களிடம் இருந்து எந்த பதிலும் தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், தன்னை கருணை கொலை செய்துவிடும்படி, குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ‘இறைவனால் படைக்கப்பட்டது இந்த உலகம். உலகத்தில் உள்ள அத்தனை வளங்களும் இங்கு வாழும் எல்லோருக்குமே பொதுவானது. ஆனால், இந்திய அரசானது, சிறுபான்மை பாலின மக்கள் மீது பாரபட்சம் காட்டி ஆணுக்கும், பெண்ணுக்கும் கிடைக்கின்ற அடிப்படை உரிமைகளைக் கூட எங்களுக்கு தர மறுக்கிறது.

அதனால் இந்திய அரசாங்கத்தின் கைகளால் மடிவதை நான் பெருமையுடன் கருதுகிறேன். எனவே, என்னை கருணைக்கொலை செய்துவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.