காதலர் தினம் எமக்கு கண்டிப்பாக தேவைதானா?

1089


நாகரீகம் என்ற அடைமழையில் நடுவே முளைத்துவிட்ட ஒரு நச்சுக் காளான் தான் இந்த காதலர் தினம். விளம்பரம் செய்யத் தெரிந்தவர்கள் அனைவரும் அழகாக விளம்பரம் செய்து பொருட்களை விற்பதற்காக மேலைத்தேசத்தில் இருந்து வந்த கரிநாள்தான் இந்தக் காதலர் தினம்.



மேலைத்தேய நாகரிகத்தில் தோன்றிய இன் நாள் மெதுவாக எம்மையும் தன் ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவந்துள்ளது தான் உண்மை. எம்மில் பலர் எதற்காக காதலர் தினம் கொண்டாடுகின்றோம் என்று தெரியாமலே கொண்டாடுவது தான் வேதனை.

ஆடையின்றி இருந்த காலத்திலும் காதலை கண்ணியமாகச் சொன்ன மரபு தான் எம் தமிழ் மரபு. எம் மரபால் ஈர்க்கப்பட்ட மேலைத்தேயர்கள் இன்று எம் கலை கலாச்சாராங்களை ஆய்வு செய்து வரும் நிலையில் நாமோ எம் மரபுகளை ஆடைகள் போல் ஒவ்வொன்றாக அவிழ்த்துப் போடுவது சற்று வேதனைக்குரிய விடயமே.



தமிழரின் திருநாள் போல் ஆகிவிட்ட இக் காதலர் தினத்தை கொண்டாட முன்னணியில் வருபவர்கள் தமிழின் பெயரால் வியாபாரம் நடாத்தும் வானொலி தொலைக்காட்சிகள் தான். தமிழரின் கலை கலாச்சார பண்டிகைகளுக்கு கொடுக்காத முக்கியத்துவத்தை இக் காதலர் தினத்திற்கு இவர்கள் கொடுபதற்க்கு காரணம் வணிக நோக்கம் தவிர வேறில்லை.



நம் குழந்தைகள் கூட காதலர் தினத்தை குதூகலித்துக் கொண்டாடுகின்ற அவமான நிலைமை யாரிடம் போய் சொல்வது. தமிழர் யாரும் காதலிக்க வேண்டாம் என்று சொல்லவில்லலை. ஆனால் நாம் யார், நம் கலாச்சாரம் என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப எம் வாழ்வியலை அமைத்துக் கொள்கின்றோமா என்பது தான் இங்கு கேள்வி.


இக் காதலர் தினத்தை அதிகமா கொண்டாடுபவர்கள் காதல் என்பதை உண்மையாக அறியாதவர்களாகவும், பாலினக் கவர்ச்சியினால் ஈர்க்கப்பட்ட இளவயதுக்காரர்களாகவே உள்ளனர். இதனால் உண்மையாக காதல் செய்பவர்களும் சற்று தர்மசங்கடத்திற்கு ஆளாவது என்னவோ உண்மை தான்.

கடந்த ஆண்டு காதலர்தினம் கொண்டாடிய அதே நபருடன் இந்தாண்டு கொண்டாடுபவர்கள் எதனை பேர்? சினிமாவில் வரும் கன்றாவிக் காதலுக்கு இந்த இளைய சமூகம் முக்கியத்துவம் கொடுப்பதன் காரணம் தான் இந்த காதலர் தினத்திற்கு கிடைத்திருக்கும் முக்கியத்துவம்.


இதைச் சொல்லும் நான் ஒன்றும் காதலுக்கு எதிரானவன் அல்ல. இதைச் சொல்லக் காரணம் ஒரு சின்ன சமுதாய சிந்தனை தான். காதலர் தினம் கொண்டாடும் அன்பு நண்பர்களே ஒரு சின்ன வேண்டுகோள் நீங்கள் நேசிப்பவர்களை சந்தோசப் படுத்துவதற்காக உங்கள் அப்பாவின் பணத்தில் வாங்கிய அன்பளிப்புப் பொருட்கள் இருவரும் மறைத்து வைப்பது தான் காலம் காலமாக நீங்கள் செய்து வருவது..

நண்பர்களே சற்று சிந்தியுங்கள் எம் தாயகத்தில் யுத்தத்தின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அன்பிற்காகவும் ஆதரவிற்காகவும் ஏங்கி நிற்போர் ஆயிரம் ஆயிரம். இத் தினத்தில் இவர்களில் ஒருவருக்கேனும் ஒருவேளை உணவளியுங்கள், படிக்க வசதியற்ற ஒரு குழந்தைக்கு ஒரு பென்சிலாவது வாங்கிக் கொண்டுங்கள்.இவர்களின் வாழ்த்து கண்டிப்பாக உங்களை மட்டுமல்ல உங்கள் காதலையும் வாழ வைக்கும்.

இப்படிச் செய்வதன் மூலம் குறிக்கோள் இன்றி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு இளைய சமுதாயத்தினராகிய நாம் ஒரு சிறிய இலட்சியத்தையாவது வரும் தலைமுறைக்கு உருவாக்கிக் கொடுக்க முடியும்.