சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை கென்ய கிரிக்கெட் சங்கம் மீண்டும் அழைத்துள்ளது. வங்காளதேசத்தில் அடுத்தாண்டு மார்ச் மாதம் 20 ஓவர் உலக கிண்ண போட்டிகள் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபுக் குடியரசு நாட்டில் அடுத்த மாதம் 15ம் திகதியிலிருந்து 30ம் திகதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகள் பங்குபெறும் இந்தப் போட்டிகளில் 6 அணிகள் மட்டுமே தெரிவு செய்யப்படும்.
இந்த ஆண்டிற்கான சர்வதேச கிண்ண மற்றும் உலக கிரிக்கெட் லீக் தொடரில் ஏமாற்றத்தைப் பெற்ற கென்யா அடுத்த வருடத்திற்கான உலகத் தேர்வினுள் தகுதி பெறும் முனைப்புடன் உள்ளது.
இந்த அணியில் தலைவராகவும், துணைத் தலைவராகவும் விளையாடி வந்த ஸ்டீவ் டிக்காலோ(42) மற்றும் தோ மஸ் ஒடாயோ(36) ஆகிய இருவரும் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டனர். ஆயினும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
அணியில் உள்ள இளம் வீரர்களை ஊக்குவிக்க ஒரு துடிப்பான தலைமை தேவை என்று எண்ணும் கென்யா கிரிக்கெட் சங்கம் இவர்கள் இருவரையும் மீண்டும் விளையாட அழைத்துள்ளது.
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற போதிலும், நைரோபி கிரிக்கெட் போட்டிகளில் இவர்கள் திறமையுடன் விளையாடி வருகின்றனர்.
எனவே கென்யா அணியைத் தலைமை தாங்கவும், வழி நடத்தவும் இவர்களை மீண்டும் அழைத்துள்ளோம் என்று கிரிக்கெட் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





