சென்னை கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை அகற்றக் கூடாது: இயக்குனர் சங்கம் வேண்டுகோள்!!

361

sivajiசென்னை கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நிறுவப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும் எனவே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்நிலையில் சிலையை அகற்றுவதற்கு தமிழ் திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் இதுதொடர்பாக பொலிஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேபோல் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொருளாளர் சேகர், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் இன்று மாநகர காவல்துறை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது..

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழகத்தின் நாடகத்துறையிலும், திரைப்படத் துறையிலும் அரிய சாதனை புரிந்தவர். தமிழக ரசிகர்களின் நெஞ்சில் வாழ்ந்துகொண்டிருக்கும் அவர் தமிழக மண்ணில் தமிழனாகப் பிறந்து தமிழர்களாகிய நமக்கு பெருமை தேடித் தந்தவர். பிரான்சு நாட்டின் கௌரவப் பட்டமான செவாலியே விருது பெற்றவர்.

இதுபோன்ற பல சிறப்புகளை தமிழ் மண்ணுக்கு சேர்த்த சிவாஜி கணேசனின் சிலை மெரினா கடற்கரை சாலையில் அமைந்திருப்பது தமிழர்களாகிய நமக்குப் பெருமையான ஒன்றாகும். எனவே, அவரது சிலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று சொல்வது தமிழர்களின் நெஞ்சிலே ஈட்டியை பாய்ச்சுவது போன்றதாகும். அந்த சிலையை அகற்றக் கூடாது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்துக்கு நாங்களும் எங்களது முழு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.