கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இன்று (20.02) 366வது நாள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
வடக்கு கிழக்கு எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த பிரதிநிதிகளும், சிவில் சமூ கஅமைப்புகள், அரசியல் கட்சிகள் மதகுருமார்கள், தென்னிலங்கை அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டு இன்றைய கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நண்பகல் ஒரு மணிவரை இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் அமைப்பினைச் சேர்ந்த கலாரஞ்சனி..
எங்களது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ள நிலையில் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை, நாட்டின் ஜனாதிபதியும் எங்கள் விடயத்தில் கைவிரித்து விட்டார், நாங்கள் கேட்பது எங்களது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இருக்கின்றார்களா? இருக்கின்றார்கள் என்றால் எங்கு இருக்கின்றார்கள்? எப்போது விடுவிக்கப்படுவார்கள்? அல்லது காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உயிரோடு இல்லை என்றால் அவர்களுக்கு என்ன நடந்தது? என்பதுவே. இதனை பொறுப்புடன் கூற வேண்டிய அரசு பொறுப்பற்று நடந்துகொள்கின்றமை வருத்தமளிக்கிறது.
இலங்கை விடயம் தொடர்பில் ஜநாவுக்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் ஒரு வருடம் நிறைவுப்பெற்றுள்ள நிலையில் இதுவரைக்கும நம்பிக்கை தரும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை.
ஐநாவுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இலங்கை அரசை காப்பாற்றும் ஒரு நடவடிக்கையே. எங்களை பொறுத்தவரை இந்த இரண்டு வருடகால அவகாசம் என்பது ஒரு பயன்றற நடவடிக்கையே. எனத் தெரிவித்த அவர்
தமிழ் அரசியல் தரப்புக்கள் தங்களின் கட்சி பேதங்களை கடந்து எங்களின் பிச்சினைகளுக்காக ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறே சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் எங்களுக்காக கடந்த காலம் போன்று குரல் எழுப்ப வேண்டும்.
இறுதி யுத்தத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு சர்வதேசமும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது. இருந்து தற்போதைய நிலையில் எங்களுக்கு இருக்கின்ற ஒரேயோரு நம்பிக்கை சர்வதேசமே எனவும் குறிட்டார்.