தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஒரு பகுதியாக, உலகின் மிக இருட்டான கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், தற்போது தென் கொரியா நாட்டில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 99 சதவித அளவில் சூரிய ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்ட, இருட்டான கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனை, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் சார்பில், லண்டன் கட்டிடக்கலை நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர்.
தூய்மை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை குறிக்கும் வகையில், இந்த கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனிதர்களின் தலை முடியை விட சுமார் 3,500 மடங்கு மெல்லியதாக உள்ள, சிறிய நானோகுழாய்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை, 14 மற்றும் 50 மைக்ரான் நீளத்தைக் கொண்டதாகும்.
சூரிய ஒளி, இந்த நானோகுழாய்களில் பிடிக்கப்பட்டு, கட்டிடத்தில் இருந்து வெப்பமாக வெளியிடப்படுகிறது. VantaBlack VBx2 என்றழைக்கப்படும் தனித்துவமான பொருளைக் கொண்டு, இந்த கட்டிடம் மூடப்பட்டிருக்கிறது.
இந்த கட்டிடம் குறித்து இதன் வடிவமைப்பாளர் அனீஸ் கபூர் கூறுகையில், ‘இந்த கட்டிடத்தில் உள்ள ’VantaBlack VBx2’ எனும் பொருள், பிரபஞ்சத்தின் மிக கருப்பான பொருள் ஆகும். இதன் அருகில் சென்றால் நாமே மறைந்து விடுவோம்.
இந்த கட்டிடம், குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தற்காலிக பெவிலியனாக உள்ளது. மேலும், இந்த கட்டிடத்தில் சிறிது சிறிதாக ஆயிரக்கணக்கில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதனை, பார்த்தால் பூமியிலிருந்து வானில் நட்சத்திரங்களைப் பார்ப்பது போன்று தெரியும். மேலும், விண்வெளியில் மிதப்பது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும்’ என தெரிவித்துள்ளார்.