கொழும்பு – கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஜனாதிபதியினால் இன்று திறந்து வைக்கப்படுகிறது!!

428

Kurundugahahetekma ICகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இருபது நிமிடங்களில் சென்றடையக்கூடிய வசதியுடன் அமைக்கப்பட்டிருக்கும் அதிவேக நெடுஞ்சாலை இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதியினால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்படுகிறது.

25.8 கிலோ மீற்றர் நீளமுள்ள இந்த அதிவேகப் பாதை சீன அரசின் அனுசரனையோடு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த அதி வேக நெடுஞ்சாலையை இன்று காலை 9.45 க்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பேலியகொட நுழைவாயிலில் வைத்து வாகனப் போக்குவரத்திற்காக அங்குரார்ப்பணம் செய்து வைப்பார்.


தினசரி சுமார் 15000 வாகனங்கள் வரை பயணிக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த வழி திறப்பதையிட்டு அன்றாடம் நீர்கொழும்பு, கண்டி மார்க்க வீதிகளில் வாகன நெருக்கடி பெருமளவு குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

களனி தோரணைச் சந்தி மற்றும் பேலியகொடை தற்போதைய மீன் சந்தைக்கருகில் அதிவேக பாதைக்கு உட்புகும் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. இடைவெளியில் ஜா எலையிலும் நுழைவாயிலொன்றுள்ளது.


பேலியகொடையிலிருந்து நுழைவு கட்டணம் 300/- ரூபா, ஜாஎலயிலிருந்து 200/- ரூபா நுழைவு கட்டணம் அறவிடப்படும்.

ஒன்பதுக்கு மேற்பட்ட ஆசனங்களைக் கொண்ட வாகனங்களுக்கு 33 ஆசனங்கள் வரை 350 முதல் 450 ரூபா வரையும், ஜாஎலயிலிருந்து 300 ரூபாவும் நுழைவு கட்டணமாக அறவிடப்படும். அதை விட பாரவூர்திகளுக்கும் பேருந்துகளுக்கும் 600 ரூபா கட்டணமாக அறவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.