திருமண பரிசுப்பொருள் வெடித்தது! பரிதாபமாய் பலியான மணமகன்!!

1098

ஒடிசாவில் திருமணத்தின் போது வழங்கப்பட்ட பரிசு பொருளில் இருந்த குண்டு வெடித்ததில், மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பொலிங்கர் மாவட்டத்தில் பட்நாகர் நகரை சேர்ந்தவர் சவுமியா சேகர் சாஹூ. இவருக்கும், ரீமா சாஹூ என்பவருக்கும் கடந்த 18ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 21ஆம் திகதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தம்பதியருக்கு நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் பரிசு பொருட்களை வழங்கியுள்ளனர்.

அந்த தம்பதியர் தங்களுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை, உறவினர்களுடன் சேர்ந்து பிரித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயம், ஒரு பரிசு பொருளை பிரித்து பார்த்தபோது, எதிர்பாராத விதமாக அந்த பரிசு பொருளானது திடீரென வெடித்துள்ளது.

இதில், மணமகனின் பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மணமகன் சேகர் சாஹூ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

காயமடைந்த மணமகள் ரீமா சாஹூ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.