மோடியின் கூட்டம் நடக்கவிருந்த பகுதிகளில் தொடர் குண்டு வெடிப்பு!!

300


bombபீகார் தலைநகர் பாட்னாவில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளதுடன் 66 பேர் காயமடைந்துள்ளனர்.

குஜராத் முதலமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி பங்கேற்ற பிரசார கூட்டத்திலும் குண்டுகள் வெடித்தன.



மோடி மேடைக்கு வருவதற்கு முன்னதாக இந்த குண்டுகள் வெடித்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பாட்னா ரயில் நிலையத்தின் 10வது நடைமேடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு திடீரென வெடித்துச் சிதறியது.

இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காந்தி மைதான் பகுதியில் வெடிக்காத நிலையில் 4 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கச் செய்யப்பட்டன. குண்டுவெடிப்பு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



மேலும், சந்தேகத்திற்குரிய 4 பேரை பிடித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாட்னாவில் 8 இடங்களில் குண்டு வைக்க திட்டமிட்டு செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த சம்பவம் குறித்து அறிக்கை அளிக்குமாறு பீகார் அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. குண்டுவெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் பாட்னாவில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உளவுத்துறைத் தலைவர் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேவை நேரில் சந்தித்து பீகார் குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்த விவரங்களை தெரிவித்தார்.