முல்லைத்தீவு தண்ணிமுறிப்பில் தமிழ் மீனவர்களின் 3 படகுகள் கடந்த 22ம் திகதி இனந்தெரியாதோரால் முழுமையாக எரித்து தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுகின்ற அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளே இவ்வாறு எரிக்கப்பட்டிருக்கின்றன.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் சென்று எரிக்கப்பட்ட படகுகளைப் பார்வையிட்டுள்ளார்.
அங்கு அவர் கரைத்துறைப்பற்று கிராம அபிவிருத்திச் சங்கச் செயலாளர் மயூரன் குமுளமுனை, தண்ணிமுறிப்பு நன்னீர் மீன்பிடிச் சங்கத் தலைவர் யூட் நிரூபன், செயலாளர் சாந்தன் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களிடம் குறித்த சம்பவம் தொடர்பிலான முழு விபரத்தைக் கேட்டறிந்தார்.
பாதிக்கப்பட்ட மீனவர்களின் தகவல்களின் அடிப்படையில், தண்ணிமுறிப்பின் மறுகரையில் இருந்த வந்த தென்னிலங்கை மீனவர்களின் நாசகாரச் செயல் என்று அறிந்த ரவிகரன், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்தார்.
அங்கு குறிப்பிட்ட சந்தேக நபரை அழைத்து விசாரித்ததுடன், சம்பவம் தொடர்பில் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்தார். மேலும் அங்கு தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களுக்கு விளக்கமளித்து எச்சரித்தார்.
பின்னர் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய ரவிகரன், குறித்த சம்பவத்தை உடனடியாக உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் தகுந்த நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.