வட மாகாண சபையின் முதலாவது அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற போது தான் அதில் கலந்து கொண்டதாகவும், முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் உரையை செவிமடுத்ததாகவும் சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானது என்று வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.
வட மாகாண ஆளுநர் ஜி. ஏ.சந்திரசிறி இந்த விடயம் தொடர்பாக மேலும் விளக்கமளிக்கையில்..
வட மாகாண சபைக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதி கடந்த 25ம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. காலை 8.30 மணிக்கு நடைபெற்ற அந்த நிகழ்விலேயே தானும், மாகாண முதலமைச்சரும் கலந்து கொண்டு கூட்டாக புதிய கட்டடத்தை திறந்து வைத்தோம்.
மாகாண ஆளுநர் என்ற வகையில் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதுடன் தேனீர் உபசாரத்திற்கு பின்னர் அங்கிருந்து வெளியேறிவிட்டேன். நான் அங்கிருந்து வெளியேறிய பின்னரே சபை அமர்வு காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.
மாகாண சபை அமர்வு ஒன்றில் இலங்கையின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு ஆளுநர் ஒருவர் கொள்கை பிரகடனம் போன்ற சம்பிரதாய நிகழ்வுகளைத் தவிர கலந்துகொள்ள முடியாது. இவற்றை தெரியாதவர்களே தான் அங்கு இருந்ததாகவும் முதலமைச்சரின் உரையை செவிமடுத்ததாகவும் எழுதியுள்ளனர்.
மாகாண சபை உறுப்பினர்களுக்காக கடந்த 24ம் திகதி யாழ். ரில்கோ ஹோட்டலில் ஒருநாள் வதிவிட செயலமர்வு நடைபெற்றது. அன்றைய தினம் அங்கு இடம்பெற்ற உரையை செவிமடுத்துக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தான் 25ம் திகதி சபை அமர்வில் கலந்து கொண்டது போன்று காண்பித்து செய்திகளை வெளியிட்டுள்ளது.
மாகாண ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதியாவார். அவரை நியமிக்கும், அப்புறப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரம் உள்ள அதிகாரமாகும். எனவே ஆளுநருக்குரிய அதிகாரம் பிரகாரமே தான் சகல சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் 25ம் திகதி நடைபெற்ற கன்னி அமர்வில் உரையாற்றுகையில் இராணுவ அதிகாரி ஒருவர் ஆளுநராக இருப்பதை தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளதையடுத்தே ஆளுநர் சந்திரசிறியின் இந்த ஆதங்கமான தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.