வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2018!(படங்கள்,வீடியோ)

930

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடைசூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீசக்கரத்துடன் கூடிய ஸ்ரீசக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாளின்   பத்தாம்  மகோற்சவ பெருவிழாவில் நேற்றைய தினம் 28.02.2018  புதன்கிழமை   காலை 10 மணியளவில் தேர்த் திருவிழா இடம்பெற்றது.

காலை 5.30 மணிக்கு கோவிலின் பிரதமகுரு  சிவஸ்ரீ  முத்து ஜெயந்தி நாதகுருக்கள்  தலைமையில் காலைக் கிரியைகள் ஆரம்பமாகி காலை எட்டுமணிக்கு வசந்த மண்டபபூஜை இடம்பெற்று பின்னர் ஸ்ரீகருமாரி நாகபூசணி அம்பாள் உள்வீதி வலம்வந்து சரியாக காலை 9.30 மணியளவில் தேரில் ஆரோகணித்து 10.00 மணியளவில் ஆண் பக்தர்கள் ஒருபுறமும் பெண் பக்தைகள் மறுபுறமும் வடம் பிடிக்க அம்பாள் மயான வீதி ஊடாக கொரவபொத்தான வீதியை நூறுக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் இருபுறமும் சூழ்ந்திருக்க வந்தடைந்தாள். .

கற்பூரச் சட்டிகள்  மற்றும்   அங்கபிரதட்சனம் செய்துகொண்டும் கொண்டு அம்பாளின் அடியார்கள் தம் நேர்த்திகடன்களை நிறைவேற்றிய வண்ணம் அம்பாளின் பின்னால் வலம்வந்தனர். காலை 11.00 மணியளவில் அம்பாளின் ரதம் இருப்பிடத்தை வந்தடைந்தது. தொடர்ந்து அர்ச்சனைகள் இடம்பெற்று மதியம் ஒருமணியளவில் அவரோகணம் என்று சொல்லகூடிய பச்சைசாத்தல் உற்சவம் இடம்பெற்றது.