நடிகர் கமல்ஹாசன் வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், நடிகை ஸ்ரீதேவி தனக்கு தங்கை முறை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியை துவங்கினார். ஆனால் கொள்கை குறித்து அறிவிக்காததால், விமர்சனங்கள் பல எழுந்தன.
இந்நிலையில், வார இதழ் ஒன்றில் கட்டுரை எழுதி வரும் கமல்ஹாசன், அதில் தனது கட்சி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘மக்கள் நலம், தமிழகத்தின் வளம் என்ற கொள்கையில் எத்தனை திட்டங்கள் வேண்டுமானாலும் கூடலாம்.
விவசாய மேம்பாடு, கல்வி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு என்ற கொள்கையை நோக்கி ஏகப்பட்ட திட்டங்கள் கைவசம் உள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏற்கனவே இருந்த முறையால், மருத்துவத்தில் தமிழகம் உயரிய தரத்தை அடைந்துள்ளதால், நீட் தேர்வுக்கு ஆதரவளிக்க தேவையில்லை.
பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் மாஃபியா கும்பல் உருவாகும். குடிப்பவர்கள் குடிப்பதை குறைக்க முடியுமே தவிர, ஒட்டு மொத்தமாக நிறுத்த முடியுமா என்பது சந்தேகமே’ என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஒரு பதிவில், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தனக்கு தங்கை முறை என்றும், இனி சினிமாவில் மார்க்கெட் கெட்டுப் போகாது என்பதால், இந்த உண்மையை தாம் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.






