யாழ். போதனா வைத்தியசாலை தொண்டர்கள் பணி பகிஸ்கரிப்பு!!

436

1

யாழ். போதனா வைத்தியசாலையில் தொண்டர்களாக பணிபுரிந்துவரும் சிற்றூழியர்கள் இன்று காலை பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.


சிற்றூழியர்கள் நியமனத்தின் போது தம்மை புறக்கணித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிற்றூழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

யாழ். போதனா வைத்தியசாலையின் புதிய கட்டடத்திற்கு முன்னாள் இன்று காலை 11.30 மணி வரை தொண்டர்களாக பணி புரியும் 199 பேர் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்..


யாழ். போதனா வைத்தியசாலையில் சென்.ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்த தொண்டர்களாகிய நாம் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக தொண்டர்களாக மிகவும் குறைந்த சம்பளமாக நாளொன்றுக்கு 175 ரூபாயை பெற்று சேவை புரிந்து வருகின்றோம்.

ஆனால் கடந்த வாரம் வைத்தியசாலைக்கு புதிதாக சிற்றூழியர்களை உள்வாங்குவதற்கான நேர்முக தேர்வு நடைபெற்றது. அந்த நேர்முக தேர்வுக்கு எம்மை அழைக்கவில்லை. எம்மை புறக்கணித்துள்ளார்கள்.

இனி சிற்றூழியர்களுக்கு அடிப்படை கல்வித்தகமை க.பொ.த. சாதாரண தரம் என்கிறார்கள். ஆனால் எம்மை சிற்றூழியர்களாக உள்வாங்குவார்கள் என்ற நம்பிகையிலையிலேயே நாம் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக குறைந்த சம்பளத்திற்கு சேவை செய்தோம்.

நேர்முக தேர்வுக்கு தோற்றியவர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்பட்டு அவர்கள் தமது சேவையை ஆரம்பித்தால் எமக்கான இந்த வேலை பறிபோகும் என தெரிவித்தனர்.

அதேவேளை வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் க.கமலேந்திரன் வைத்தியசாலைக்கு வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களுடனும் வைத்தியசாலை நிர்வாகத்துடனும் பேச்சுக்களை நடாத்தினர்.

அமைச்சரவையில் விசேட ஏற்பாடுகள் கொண்டுவருவதன் மூலம் நேர்முக தேர்வு நடாத்தபட்டு மாவட்ட ரீதியில் முன்னுரிமை வழங்கப்பட்டு, உங்கள் சேவைகளையும் கருத்தில் கொண்டு உங்களுக்கான தீர்வுகள் பெற்று தர முயற்சிகளை செய்வதாக உறுதி வழங்கியதை அடுத்து தொண்டர்கள் தமது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.