வவுனியா வைத்தியசாலை ஊழியரின் நூதன மோசடி : பாதிக்கப்பட்ட பெண் பொலிசில் முறைப்பாடு!!

457

வவுனியா பொதுவைத்தியசாலை ஊழியர் ஒருவர் நோயாளி ஒருவரின் மனைவியிடம் நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வவுனியா பொது வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதாரப்பணி உதவியாளராகிய பா.நாகேந்திரன் என்பவரே 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பண மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட கணவரை வவுனியா பொது வைத்தியசாலயில் அனுமதித்த குறித்த பெண்ணிடம் உங்கள் கணவரை விசேட சிகிச்சை வழங்குவதன் மூலம் உடனடியாக காப்பாற்ற முடியும். பெரிய வைத்தியரிடம் சொல்லி அதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்ய முடியும். மருந்துகள் வெளியிலிருந்து வாங்கவேண்டும் என தெரிவித்து மோசடி செய்த நபர் பணம் கேட்ட நிலையில் தனது கணவரை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்ற அவசரத்தில் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை குறித்த ஊழியரிடம் கொடுத்ததாகவும் அதன் பின் அவ் ஊழியர் தலை மறைவாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.

வங்கியில் தனது நகைகளை அடகு வைத்து பணத்தை குறித்த நபரிடம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்த பாதிக்கப்பட்ட பெண் அவ் வீடியோவை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

அத்துடன் இம் மோசடி தொடர்பாக 08.02.2018 ஆம் திகதி வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளருக்கு முறைப்பாடு எழுத்து மூலம் வழங்கப்பட்ட நிலையில் 20.02.2018 பணிப்பாளரினால் விசாரணை ஒன்று நடத்தப்பட்ட போதும் மோசடியில் ஈடுபட்ட பணியாளர் விசாரணைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதுடன் முறைப்பாடு செய்த நாளிலிருந்து குறித்த நபர் 25.02.2018 திகதி வரை வைத்தியசாலையிலிருந்து நீண்ட விடுமுறையில் சென்றிருந்தார்.

வவுனியா பொலிஸ் நிலையத்தில் 14.02.2018 அன்று செய்யப்பட்ட பண மோசடி தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் நிமித்தம் 02.03.2018 குறித்த நபர் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்க முடியும் என தெரிவிக்கும் பொலிசார், இந்த நூதன மோசடி தொடர்பாக முறைப்பாடு செய்த போதிலும் சம்பந்தப்பட்டவர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார்.

அதன் காரணமாக கொழும்பிலுள்ள இலஞ்ச ஆணைக்குழுவிடம் முறைப்பாடு ஒன்றை 02.03.2018 மேற்கொண்டதாக மேலும் தெரிவித்தார்.