மண்ணெண்ணை ஊற்றி மனைவியை எரித்தவருக்கு மரண தண்டனை!!

626

judgeதன்னுடைய மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த கணவருக்கு நுவரெலிய மாவட்ட மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து மேல் நீதிமன்றம் நேற்று இந்த மரண தண்டனையை வழங்கியுள்ளது.

ஹட்டன் காமினிபுர பிரதேசத்தை சேர்ந்த 66 வயதான ஆப்தீன் என அழைக்கப்படும் பொன்னையா அந்தோனிதாஸ் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

2000ம் ஆண்டு ஏப்ரல் 17ம் திகதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு முற்றியதால் குற்றவாளியான இந்த நபர் மனைவி மீது மண்ணெண்ணையை ஊற்றி எரியூட்டியுள்ளார். அப்போது இவருக்கு 53 வயது.

5 பிள்ளைகளின் தாயான 53 வயதான ரஹிமா உம்மா என்ற பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர்கள் இருவரும் மதுபானத்திற்கு அடிமையாகி இருந்ததாகவும் சம்பவம் நடந்த தினத்தில் இருவரும் மதுபானம் அருந்தி இருந்தனர் எனவும் மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். தாய் மீது தமது தந்தை எண்ணெய் ஊற்றி எரியூட்டுவதை தாம் கண்டதாக மகன்மார் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.

அதேவேளை தீக்காயங்களுக்கு உள்ளான ரஹிமா மூன்று நாள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தனது கணவரே தனக்கு எரியூட்டியதாக மருத்துவரிடம் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் அரச சட்டத்தரணி தாரக தர்மசிறியும் குற்றம் சுமத்தப்பட்ட தரப்பில் சட்டத்தரணி டி.பி. ஹேரத்தும் ஆஜராகியிருந்தனர்.

குற்றச்சாட்டு நேரில் கண்ட சாட்சியங்களுடன் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாக நீதிபதி லலித் ஏக்கநாயக்க அறிவித்தார்.