இலங்கை கடற்படையின் மனிதத்தன்மையற்ற செயலை கண்டிக்கவும் – ஜெயலலிதா மீண்டும் கடிதம்!!

326


jayalalithaதமிழக மீனவர்கள் விவகாரத்தில் இலங்கையிடம் உரிய முறையில் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 26ம் திகதி தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



மனிதத்தன்மையற்ற இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினரையும் பொருட்படுத்தாமல் இலங்கை கடற்படை இவ்வாறு தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

ஏற்கனவே 75 மீனவர்களும் 35 படகுகளும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மேலும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை மிகவும் முக்கிய பிரச்னையாக கருதி அணுக வேண்டும் என்றும் பிரதமரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.



இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்கு உரிய முறையில் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் இத்தகைய நடவடிக்கைகளை கைவிட இலங்கையிடம் பிரதமர் தனிப்பட்ட முறையிலும் அணுகவேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.



பாக்கு நீரிணை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதி என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் தமிழக மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உரிமையையும் பாதுகாக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்றும் தெரிவித்துள்ளார்.