இன்றைய யுகத்தில் கணனி மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனை என்பது தவிர்க்கமுடியாத பழக்கவழக்கமாகி விட்டது. ஆனால், அவற்றை அளவுக்கு மீறிப்பாவிப்பதால் கண்ணுக்கு ஆபத்து நேரிடுகிறது என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர்.
உண்மையில் கணனியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் இருமணிநேரத்துக்கொருதடவை கண்ணுக்கு ஓய்வு வழங்கவேண்டியது அவசியமாகும். மேலும் இவற்றை இருட்டுக்குள் பயன்படுத்தக்கூடாது. எப்போதும் வெளிச்சூழலில் மட்டுமே கணனி, தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி என்பவற்றைப் பாவிக்கவேண்டும் எனக் கூறுகின்றனர் கண் வைத்திய நிபுணர்கள்.
லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரணையுடன் கல்முனை ஆதாரவைத்தியசாலையில் இருநாட்களில் (25.26) 70இலட்சரூபா பெறுமதியான 140 ஏழை கண்நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திரசிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்துமுடிக்கப்பட்டன.
வைத்திய அத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை) குண.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில் இச்சேவை நடைபெற்றது.
லண்டனிலிருந்து வந்த ஈழத்து கண்வைத்திய நிபுணர்களான எம்.லோகேந்திரன் (வட்டுக்கோட்டை) ராதா தர்மரெட்ணம் (களுவாஞ்சிக்குடி) காந்தா நிறஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோர் பிரதான பாகமேற்றனர்.
நாட்டிலுள்ள பிரபல கண்வைத்திய நிபுணர்களான எஸ்.சந்திரகுமார்(யாழ்ப்பாணம்), ஏ.பி.கங்கிலிபொல(கல்முனை) பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்திய நிபுணர்கள் இச்சத்திரசிகிச்சைகளை செய்தனர்.
லண்டனிலிருந்து வந்த டாக்டர் மகாரத்னம் லோகேந்திரன் யாழ்.வட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். பிரபலமான கண்வைத்திய நிபுணரான இவர் இலங்கை உள்ளிட்ட உலகிலிருந்து கண்வைத்திய நிபுணத்துவ கற்கைக்காக லண்டனுக்கு வரும் வைத்தியர்களுக்கு கற்பித்து வருபவராவார்.
அவர்களின் கருத்துக்கள் வருமாறு டாக்டர் மகாரத்னம் லோகேந்திரன் கூறுகையில்;
கடந்த 30வருட சேவையில் இதுவரை 4000பேருக்கு கற்றக்ட் சத்திரசிகிச்சையை செய்துள்ளோம்.
2002இல் அப்போது சாயி நிலையமும் அரசாங்க அதிபரும் விடுத்தவேண்டுகோளுக்கிணங்க யுத்தநிறுத்த காலத்தில் கண்சிகிச்சை முகாமை பல சிரமங்களுக்குமத்தியில் நடத்தினோம்.
பின்பு முல்லைத்தீவு, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் தொடர் மருத்துவ சேவையை வழங்கி வந்தோம். 2012இல் மீண்டும் மன்னார், முல்லைத்தீவு பகுதிகளில் செய்தோம்.
2013இல் மட்டக்களப்பு, நுவரெலியா, கண்டி போன்ற பிரதேசங்களில் கண் சிகிச்சை முகாம்களை நடத்தினோம் . கல்முனைக்கு வருவது இதுவே முதற்தடவையாகும்.
2013இல் மட்டக்களப்பு வந்த 100பேருக்கு கற்றக்ட் சிகிச்சையை வழங்கினோம். கண்இமை சிகிச்சை, பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை என்பனவும் செய்தோம்.
வைத்தியகலாநிதி டாக்டர் காந்தா நிறஞ்சன் கருத்துரைக்கையில்:
இலங்கையைச் சேர்ந்த 3000 தமிழ் வைத்தியர்கள் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்கின்றனர். ஆனால் ஆக 400பேர் எமது அமைப்பிலுள்ளனர். அவர்களது பங்களிப்பிலே இந்த மாபெரும் சேவையைச் செய்யமுடிகிறது.
2002இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பு இலங்கையில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் எமது வைத்தியசேவையை வழங்கி வருகின்றது.
நாம் அரசசார்பற்ற, கட்சிசார்பற்ற அமைப்பு. தேவைகண்டவிடத்து நலிவுற்ற எமது மக்களுக்கு மருத்துவசேவையைச் செய்து வருகின்றோம் என்றார்.
வைத்தியநிபுணர் டாக்டர் ராதா தர்மரெட்ணம் கூறுகையில்;
எமது அமைப்பின் உறுப்பினர்களின் மாதசந்தா சேகரிப்பு பணத்தில் சிகிச்சைக்கான உபகரணங்களை மட்டுமே வாங்குகின்றோம். அதாவது கண்வில்லைகள், அதற்கான சிறு உபகரணங்கள் சிலவற்றை வாங்குகின்றோம்.
மற்றும்படி நாம் இங்கு வந்துபோவது, மற்றைய செலவுகள் எமது சொந்த செலவில்தான்.இதனை சேவையாகச் செய்கின்றோம்.இங்கு பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கிறது.
மட்டு. படுவான்கரை மக்கள் பெருமளவில் இந்த கற்றக்ட் நோயால் பீடிக்கப்பட்டுள்ளனர். களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நான் செய்த சோதனையில் சுமார் 1000பேரளவில் கற்றக்ட்டால் பீடிக்கப்பட்டுள்ளரென்று தெரிந்தது. ஸ்கிரினிங் 800 பேருக்குச் செய்தோம். அவர்கள் அனைவருக்கும் கற்றக்ட் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. எனினும் மோசமாகவுள்ள ஆக 150பேருக்கு இம்முறை செய்கிறோம் என்றார்.
டாக்டர் லோகேந்திரன் கூறுகையில்;
லண்டனில் 65வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்த கற்றக்ட் வருகிறது. ஆனால் இங்கு 40 – 45வயதினிலே வருகிறது. இதற்கு காரணம் இலங்கையில் சூரியன் அண்மையிலிருப்பதும் அதிகநீரிழப்பும்.
அங்கு நீரிழிவு நோய் வந்தால் பிரதி வருடமும் அதற்கு சிகிச்சைபெறும் அதேவேளை, கண் ஸ்கிரினிங் செய்யவும் வேண்டும். ஆனால் இங்கு அந்த நடைமுறை இல்லாமையினால் பலர் எளிதாக இந்தநோய்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்றார்.
டாக்டர் காந்தாநிறஞ்சன் கூறுகையில்:
சூரியஒளிக் குறைபாடு, போதுமான வெளிச்சமின்மை இவையெல்லாம் மயோபியாவை உருவாக்கக்கூடியவை. ரிவி கணனியில் இருந்து சூடான வளி வருகிறது. இது கண்ணைப் பாதிக்கக்கூடியது.இதனால் உலர்கண் வரலாம். அதாவது கண்ணீரை வற்றவைப்பதால் வரண்ட உலர்கண் உருவாகும்.
இருட்டில் கணனியோ, போனோ பார்க்கக்கூடாது. ஜப்பானில் இதனை றெட்ஜ என்பார்கள். இயற்கை கண்ணீர் வற்றிவிடும். இதனால் செயற்கை துளிகள் இடவேண்டும்.
டாக்டர் ராதா கூறுகையில்;
வாகரையில் நாம் ஒரு பெற்றோரை இழந்த இல்லத்தை நடத்திவருகிறோம்.அது திலகவதியார் இல்லம் அங்கு 50பிள்ளைகளுள்ளனர். 1997இலிருந்து ஆரம்பித்தோம். பூரண நிதிஆதரவு நாமே வழங்குகிறோம்.
கண்ணைப் பாதுகாக்க விழிப்புணர்வு தேவை. ஊதா நிறம் கலந்த கதிர் பாதிக்காத கண்ணாடிகளை தாராளமாக அணியலாம். வெறுமனே கண்ணாடிகளை அணியக்கூடாது.
மொத்தத்தில் கண்ணைப் பாதுகாப்பதென்றால் விழிப்புணர்வு அவசியம். நேரத்துக்கு உரிய சிகிச்சைப் பெற்றால் சிக்கலைத் தவிர்க்கலாம்.