வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாக தமிழ் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் இன்று திங்கட்கிழமை அமெரிக்கா பயணமாகியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் ஆகியோரே அமெரிக்கா பயணமாகவுள்ளனர்.
அங்கு நடைபெறவுள்ள நிகழ்வொன்றில் கலந்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இதன் போது அவர்கள் இந்த நிகழ்வுக்கு மேலதிகமாக அமெரிக்காவின் அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார்கள் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.





