வவுனியா சிறுவர் பூங்காவில் நுளம்புத் தொல்லை, சரிந்து விழும் நிலையில் மரங்கள்!!

724

வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவானது கடந்த வருடம் 10 இலட்சம் ரூபா நிதியில் புனரமைப்புச் செய்யப்பட்டு வடமாகாண முதலமைச்சரினால் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.

இதன் பின்னர் நகரசபையினரால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் கேள்விக் கோரல் மூலம் தனியார் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவர் பூங்காவானது பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.

கேள்விக் கோரல் மூலம் பெற்றுக்கொண்டவர்களுக்கு பல தடவைகள் மாலை நேரத்தில் அங்கு நுளம்புத் தொல்லை அதிகரித்து காணப்படுவதாகவும் அதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பெற்றோர்கள் தெரிவித்திருந்தனர்.

நுளம்புத் தொல்லை அதிகரித்துக்காணப்படுவதால் நேரகாலத்துடன் சிறுவர்களை 5 மணியளவில் அழைத்துச் செல்லவேண்டிய நிலையும் பெற்றோர்களும் நுளம்புக்கடிக்குள் அகப்படவேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படுகின்றது.

மாலை நேரங்களில் நுளம்புப் பெருக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பல தடவைகள் தெரிவித்து வந்த நிலையிலும் இன்று வரையில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அத்துடன் பூங்காவினுள் உள்ள மிகவும் பழமைவாய்ந்த மரங்கள் நீண்டு வளர்ந்து செல்கின்றன. இது சிலவேளைகளில் காற்று மழைகளினால் அப்பகுதிகளில் வீழ்ந்து சிறுவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதுடன் பாறி வீழ்ந்துவிடவும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது.

எனவே இவ்வாறு பாரிய மரங்களில் கிளைகளை வெட்டி சிறுவர்கள் மீது வீழ்ந்துவிடாமலிருக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன் நுளம்புப் பெருக்கத்தையும் கட்டுப்படுத்தி சிறுவர்களின் பொழுது போக்கிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெற்றோர்கள் கோரியுள்ளார்கள்.